யாழ். மண்ணில் மீண்டும் ஒரு கரப்பந்தாட்டத் திருவிழா!
வீரர்கள் தேர்வு தீவிரம்!
யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்படும் புகழ்பெற்ற ‘பிரிமியர் லீக்’ கரப்பந்தாட்டப் போட்டிகள் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் அறிவித்துள்ளார்.
இத்தொடரில் பங்கேற்கும் 6 அணிகளுக்காக 170-க்கும் மேற்பட்ட திறமையான வீரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆவரங்கால், அச்சுவேலி, புத்தூர், அரியாலை, நீர்வேலி, வடமராட்சி, வலிகாமம் மற்றும் தீவகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு அணிகளின் கீழ் விளையாடவுள்ளனர்.
தற்போது 3 அணிகளுக்கான உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
கிராமப்புறங்களில் மறைந்துள்ள கரப்பந்தாட்டத் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களைத் தேசிய ரீதியிலான போட்டிகளில் பிரகாசிக்கச் செய்வதே இந்த பிரிமியர் லீக் தொடரின் முதன்மை நோக்கமாகும் எனத் தலைவர் செந்தூரன் சுட்டிக்காட்டினார்.
போட்டிகளுக்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் போட்டிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தின் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

