அதனோர் வழக்கு: தேசபக்தியின் பெயரால் அரங்கேறிய ஒரு நிழல் உலக சதி
ஹோலிவுட் திரைப்படங்களின் திரைக்கதைகளை மிஞ்சும் அளவுக்கு, நிஜ வாழ்க்கையில் பிரான்ஸ் நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் குற்றப் பின்னணி தான் அதனோர் வழக்கு (Procès Athanor). உளவுத்துறை அதிகாரிகள், இரகசிய சங்கங்கள் (Freemasonry), கூலிப்படையினர் மற்றும் பெருநிறுவன முதலாளிகள் என பலரும் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு, “தேசப் பாதுகாப்பு” என்ற போர்வையில் எப்படி ஒரு கொடூரமான குற்றக் கும்பல் உருவாக்கப்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டியது.
இந்தக் குற்றக் கும்பலின் ஆணிவேர் ‘அதனோர்’ (Loge Athanor) எனப்படும் ஒரு இரகசிய மேசனிக் மன்றம் (கொத்தனார் சங்கம் ) என்ற கிளையில் (Masonic Lodge) தொடங்குகிறது. பிரான்சின் தேசிய பெருங்குழுவில் (Grande Loge Nationale Française – GLNF) இயங்கி வந்த இந்தக் கிளையின் தலைவராக (Vénérable Maître) இருந்தவர் பிரடெரிக் வாக்லியோ (Frédéric Vaglio). இவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர்.
வாக்லியோவுடன் இணைந்து இந்த நிழல் உலக சாம்ராஜ்யத்தை வழிநடத்தியவர் லூக் ஃபூர்னியே (Luc Fournié) மற்றும் பிரெஞ்சு வெளியக உளவுத்துறையான டி.ஜி.எஸ்.இ (Direction Générale de la Sécurité Extérieure – DGSE) அமைப்பின் முன்னாள் அதிகாரியான டேனியல் ஃபாரெஸ்டியர் (Daniel Forestier).
இவர்களின் தந்திரம் மிகவும் அபாயகரமானது. உளவுத்துறையில் பணியாற்றும் இளம் ராணுவ வீரர்களை அணுகிய இந்தத் தலைவர்கள், “நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிலரை இரகசியமாகத் தீர்த்துக்கட்ட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது” என்று மூளைச்சலவை செய்தனர். தேசபக்தி என்ற மாய வலையில் விழுந்த பல இளம் வீரர்கள், தாங்கள் செய்வது ஒரு தனியார் கூலிப்படைக்கான (Officine criminelle) கொலைகள் என்பதை அறியாமலேயே இந்தக் கும்பலில் இணைந்தனர்.
இந்தக் கும்பலின் முக்கிய நோக்கம் பணம். தங்களை ஒரு ‘நிழல் உளவுத்துறை’ போலக் காட்டிக்கொண்ட இவர்கள், பெருநிறுவன முதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களிடம் பெருமளவில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கொலை ஒப்பந்தங்களை (Contrats d’assassinat) நிறைவேற்றினர்.
தொழில் போட்டியை ஒழிப்பது, சொத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்பது, அல்லது தங்களுக்கு இடையூறாக இருப்பவர்களை மிரட்டுவது என எதற்கும் இவர்கள் தயங்கவில்லை.
இந்த அதனோர் கும்பல் பல கொலைகளையும், கொலை முயற்சிகளையும் மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தது. அதில் சில முக்கியமான சம்பவங்கள்:
லாரன்ட் பாஸ்காலியின் படுகொலை (L’assassinat de Laurent Pasquali):
2018-ஆம் ஆண்டு, பிரபல ஒட்டப்பந்தைய மகிழுந்து ஓட்டுநரான (Pilote automobile) லாரன்ட் பாஸ்காலி திடீரென மாயமானார். பல மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் ஒரு அடர்ந்த வனப்பகுதியில் (Forêt) புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவருக்கு நிதியுதவி செய்த ஒரு புரவலருக்கும் (Sponsor) அவருக்கும் ஏற்பட்ட பணப் பிரச்சனைக்காக, அதனோர் கும்பலுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
தங்களுக்குள்ளேயே ஒரு துரோகம் – டேனியல் ஃபாரெஸ்டியர் கொலை:
இந்தக் கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்ட முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேனியல் ஃபாரெஸ்டியர், 2019-ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் (Haute-Savoie) சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரின் சந்தேகம் அவர் மீது திரும்பியதால், அவர் உண்மைகளை கக்கிவிடுவார் என்ற அச்சத்தில் இந்தக் கும்பல் தங்களின் சொந்த கூட்டாளியையே தீர்த்துக்கட்டியது.
எவ்வளவு பெரிய குற்றவாளிகளாக இருந்தாலும், அவர்கள் செய்யும் ஒரு சிறு தவறு அவர்களை காட்டிக்கொடுத்துவிடும் என்பதற்கு அதனோர் வழக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தக் கும்பலின் வீழ்ச்சி, ஒரு சிறிய கவனக்குறைவால் தொடங்கியது.
அந்த நாள்: 2020 ஜூலை மாதம்.
இடம்: பாரிஸ் அருகே உள்ள க்ரெட்டெய்ல் (Créteil) என்ற நகர்ப்பகுதி.
மரி-ஹெலன் டினி (Marie-Hélène Dini) என்ற 54 வயது பெண் தொழிலதிபரை (Femme d’affaires) கொலை செய்ய அதனோர் கும்பல் ஒரு ஒப்பந்தத்தை ஏற்றிருந்தது. தொழில் போட்டிக் காரணமாக அவரைத் தீர்த்துக்கட்ட, இரண்டு இளம் இராணுவ வீரர்களை (DGSE முகவர்கள்) இந்தக் கும்பல் அங்கு அனுப்பியிருந்தது.
அவர்கள் இருவரும் திருடப்பட்ட ஒரு மகிழுந்தில் , போலி பதிவு எண்ணுடன் மரி-ஹெலனின் வீட்டின் அருகே நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு விழிப்புணர்வுள்ள குடிமகன் (Un citoyen vigilant), இந்த காரின் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருப்பதை கவனித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காரைச் சுற்றி வளைத்தனர். காருக்குள் இருந்த இருவரையும் சோதனையிட்டபோது, அவர்களிடம் இராணுவப் பயன்பாட்டிற்கான கத்திகள் (Couteaux militaires) மற்றும் துப்பாக்கிகள் இருந்தன. அவர்கள் போலீசாரிடம், “நாங்கள் டி.ஜி.எஸ்.இ (DGSE) உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள்; இது நாட்டின் இரகசியப் பணி (Mission secrète), இதில் தலையிடாதீர்கள்” என்று மிரட்டினர்.
ஆனால் உஷாரான காவல்துறையினர், நேரடியாக உளவுத்துறைத் தலைமையகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, “அப்படி ஒரு இரகசியப் பணியை நாங்கள் கொடுக்கவில்லை” என்ற பதில் வந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
க்ரெட்டெய்லில் பிடிபட்ட அந்த இரண்டு வீரர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், ஒட்டுமொத்த அதனோர் கும்பலின் முகமூடியும் கிழிந்தது. தாங்கள் தேசத்திற்காகக் கொலை செய்யவில்லை, மாறாக பிரடெரிக் வாக்லியோ போன்றவர்களின் பண ஆசைக்காக, ஒரு தனியார் கூலிப்படையாக பயன்படுத்தப்பட்டோம் என்ற உண்மையை உணர்ந்து அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரிகள், காவல்துறை ஆய்வாளர்கள், தனியார் துப்பறியும் நிபுணர்கள் என பலரின் வீடுகளிலும் சோதனைகள் (Perquisitions) நடத்தப்பட்டு, அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அதனோர் ரகசிய சங்கம் தடை செய்யப்பட்டது. பிரெஞ்சு உளவுத்துறையின் பெயர் கடுமையாகச் சேதமடைந்தது. “நாட்டின் பாதுகாப்பு” என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம் செய்த இந்த நிழல் உலக சாம்ராஜ்யம், ஒரு சாதாரண குடிமகனின் தொலைபேசி அழைப்பால்(மிகிழுந்து பற்றி தகவல் கொடுத்தவர் ) தரைமட்டமானது. இதுவே பிரான்ஸ் நீதித்துறை வரலாற்றில் ‘அதனோர் வழக்கு’ (Procès Athanor) அல்லது ‘பார்பூஸ் வழக்கு’ (L’affaire des Barbouzes) என்று அழைக்கப்பட்டு, பலரை உறைய வைக்கும் ஒரு வரலாற்றுச் சம்பவமாகப் பேசப்படுகிறது.

