15 நிமிடங்களில் குளிப்பாட்டி உலர வைக்கும் மனிதர்களைக் கழுவும் இயந்திரம் – ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு!
ஜப்பானைச் சேர்ந்த சயின்ஸ் கோ எனும் நிறுவனம், ‘மிராய் நிங்கன் செண்டகுக்கி எனப்படும் எதிர்காலத்திற்கான ‘மனிதர்களைக் கழுவும் இயந்திரத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒசாகாவில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2025 கண்காட்சிக்கு முன்னதாக இந்தத் தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த இயந்திரம், அதிநவீன நீர் பீச்சுகள் (water jets), காற்று குமிழ்கள் மற்றும் உலர்த்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதனை வெறும் பதினைந்து நிமிடங்களில் குளிப்பாட்டி உலர வைக்கிறது. பயனர் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய, இதில் உள்ள சென்சார்கள் உடலின் வெப்பம் மற்றும் அழுத்தத்தை தானாகவே சீரமைக்கின்றன.
ஜப்பானின் பாரம்பரியக் குளியல் கலாச்சாரம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் குளிப்பாட்டுவதுடன் மட்டுமல்லாமல், பயனரின் மன அழுத்த அளவை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப மனதை அமைதிப்படுத்தும் காட்சிகளை இயந்திரத்தின் உட்புறத்தில் ஒளிபரப்புகிறது. இதன் மூலம் குளிப்பவர்களுக்கு முழுமையான மன நிம்மதியும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. சுகாதாரம் மற்றும் எதிர்கால நவீன வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் வரும் காலங்களில் முதியோர் பராமரிப்பு மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் விண்வெளிப் பயணங்களில் தங்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க ஒரு சிறந்த தீர்வாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

