வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(12) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக, எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு கோரியே இக்கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கோந்தைப் பிட்டியில் அமைந்துள்ள குற்ற விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் குறித்த அழைப்புக்கடிதத்ததைக் கையளித்துள்ளனர்.
எனினும் எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு சமூகளிக்க முடியாதுள்ளதெனவும், அதற்கான திகதியை மாற்றித்தருமாறும் ஜாட்சன் பிகிராடோ கேட்டுக்கொண்டதற்கிணங்க,எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்கு மூலத்தை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.