ப”பயங்கரவாதம் இல்லாத நாட்டிற்கு எதற்கு இந்தச் சட்டம்?”

ப”பயங்கரவாதம் இல்லாத நாட்டிற்கு எதற்கு இந்தச் சட்டம்?” – மன்னாரில் கையொப்பப் போராட்டம் மற்றும் ஊடகச் சந்திப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர முயலும் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ (ATA) முழுமையாக நீக்கக்கோரி மன்னாரில் இன்று சனிக்கிழமை பாரிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

 

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MESEDO) ஏற்பாட்டில், அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றது. இதன்போது, குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ள தபாலட்டைகளில் பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

 

 

தொடர்ந்து நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஆகியோர் முக்கிய கருத்துக்களை முன்வைத்தனர்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள அனைத்து மோசமான அம்சங்களும் புதிய சட்டமூலத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளன. இது மக்களின் அடிப்படை உரிமைகளை நேரடியாகப் பாதிக்கிறது.

 

அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்க சர்வசன வாக்கெடுப்பு அவசியம். ஆனால், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்கும் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கிறது.

 

நாட்டில் தற்போது பயங்கரவாதம் இல்லாத சூழலில், இத்தகைய அடக்குமுறைச் சட்டம் அவசியமற்றது. இது தமிழ் மக்களை மட்டுமன்றி பெரும்பான்மை சிங்கள மக்களையும் பாதிக்கக்கூடியது என சுட்டிக்காட்டினா். .

 

 

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, மக்களை ஒடுக்கும் இத்தகைய சட்ட முயற்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin