மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு – தவிசாளர் அதிரடி முடிவு!
மன்னார் நகர சபையின் 9-ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும், இம்முறை சபை நடவடிக்கைகளைச் செய்தி சேகரிக்க பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழமையாக நகர சபையின் மாதாந்த அமர்வுகளில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்குத் தவிசாளரினால் எழுத்து மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய அமர்வில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
கடந்த அமர்வின் போது சபையில் உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதங்களும் குழப்பங்களும் நிலவின. குறிப்பாகத் தவிசாளருக்கும், முன்னாள் தவிசாளருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்க நிலை மற்றும் சில உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிராக முன்வைத்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.
சபையில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் வெளிச்சத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கோலேயே ஊடகங்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சபை அமர்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சபை அமர்வுகள் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா? உங்கள் கருத்து என்ன?



