நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி 9 அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 6 அங்குலமும், அக்குளத்தில் 10 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.
வாகனேரி குளத்தின் நீர்மட்டம் 16 அடி 11 அங்குலமும், கட்டுமுறிவு குளத்தின் நீர்மட்டம் 6 அடியும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16 அடி 5 அங்குலமும், அக்குளத்தில் 12 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.
வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13 அடி 6 அங்குலம் அக்குளத்தில் 12 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.
புணானை அணைக்கட்டு 4 அடி 7 அங்குலமும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16 அடி 2 அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி 2 அங்குலமும் அதிகரித்துள்ள நிலையில், அக்குளத்தின் 2 வான்கதவுகள் 2.5 அடி உயரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைப் பகுதியில் 41 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 85.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 69.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 35 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 33 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 46 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியை பயன்படுத்தும் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் குடியிருப்புக்களிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால், பல தொற்று நோய்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.