மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கசிப்பு தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியானையையடுத்து கடந்த நவம்பர் 22 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து நவம்பர் 23 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை பிணை எடுப்பதற்கு எவரும் வராத நிலையில் அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டு மட்டு. சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் மீது சக கைதிகள் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அவர் கடந்த 27 ஆம் திகதி படுகாயமடைந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் மீது மொட்டையான ஆயுதத்தால் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்ததுடன், உறவினரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணையை முன்னெடுத்த நிலையில் உயரிழந்தவருடன் 9 கைதிகள் சிறைக்கூட அறை ஒன்றில் இருந்து வந்துள்ளதாகவும், குறித்த நபர் தொடர்ச்சியாக கசிப்பு தேவை என சத்தமிட்டு வந்துள்ளதாகவும் இதனால் சக கைதிகளுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவர் மீது சக கைதிகளான வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட இருவரும் போதைபொருள் தொடர்பாக வாழைச்சேனை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவருக்கும் எதிராக நேற்று வியாழக்கிழமை பொலிசார் வழக்கு தொடர்ந்ததையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் சிறையில் இருக்கும் இருவரையும் குறித்த வழக்கில் 27ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.