கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழாவின் முதற்கட்ட நிகழ்வு நேற்றைய தினம் (07.10.2023) ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வின் ஆரம்பக்கட்டமாக அதிதிகள் உட்பட பட்டம் பெறவிருந்த மாணவர்கள் வரவேற்கப்பட்டு மங்கள குத்துவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இப்பொதுபட்டமளிப்பு விழாவில், 1760 கலாநிதி பட்டம், பட்டப்பின் படிப்பு பட்டங்கள், உள்வாரி, மற்றும் வெளிவாரி பட்டங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

அத்துடன் இப்பட்டமளிப்பு விழாவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமை தாங்கியதுடன் பட்டதாரிகளுக்கு பட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

இதன் போது பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் கலாநிதிப்பட்டம், விஞ்ஞான கல்வியில் முதுமாணி, விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, கல்வியியல் முதுமாணி, கலை முதுமாணி, வியாபார நிர்வாக முதுமாணி, அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம் ஆகிய 55 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை 213 இளமாணி பட்டங்களும் இரண்டாவது மூன்றாவது அமர்வுகளில் முறையே 274 மற்றும் 318 இளமாணிப் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் (08.10.2023) முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அமர்வுகளில் முறையே 251, 338, 311 இளமாணிப்பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor