யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் குழு மோதல்!!
5 பேர் வைத்தியசாலையில் – 21 மாணவர்கள் விளக்கமறியலில்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் இரவு இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் குழு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் வீதியில் நின்று மோதலில் ஈடுபட்டதுடன், மாணவன் ஒருவன் பிளேட்டினால் (Blade) இரு மாணவர்களுக்கு வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தியுள்ளாா்.
இம்மோதல் சம்பவத்தில் பிளேட்டினால் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானவர்கள் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் காவற்துறையினர், பிளேட்டினால் வெட்டிக் காயமேற்படுத்திய மாணவனையும், குழுக்களாக வீதியில் மோதலில் ஈடுபட்டுப் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் குழுக்களைச் சேர்ந்த 20 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) முன்னிலைப்படுத்திய வேளை, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இக்குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்குக் காவற்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

