12 கோடி ரூபா இலஞ்ச வழக்கு: சந்தேகநபர் சரித் அபேசிங்கவின் வீடும் முடக்கம் !
12 கோடி ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வீடொன்று முடக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (16) மனுவொன்றைத் தாக்கல் செய்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் தொடர்புடைய மற்றைய சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளும் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றச் செயல்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வழக்கு எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

