எசெக்ஸ்-லண்டன் எல்லைப்பகுதியில் காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை

எசெக்ஸ்-லண்டன் எல்லைப்பகுதியில் காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை: ஆயுதங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல்; 105 பேர் கைது!

பிரித்தானியாவின் எசெக்ஸ் மற்றும் லண்டன் எல்லைப் பகுதிகளில் காவற்துறையினர் முன்னெடுத்த தீவிர சோதனை நடவடிக்கையின்போது சுமார் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட வாகனங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரென்ட்வுட் (Brentwood), ஹார்லோ (Harlow), செல்ம்ஸ்போர்ட் (Chelmsford), பாசில்டன் (Basildon), துர்ராக் (Thurrock) மற்றும் கிரேஸ் (Grays) ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இரண்டு வாரங்களாக இந்த விசேட வீதிக் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 428 வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போதைப்பொருள் பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 34 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 20 பேர் தடுத்து வைக்கப்பட்டதுடன், போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக 103 அபராதப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

குடிவரவு சோதனைக்குட்படுத்தப்பட்ட 93 பேரில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தமை மற்றும் நாடு கடத்தல் உத்தரவுகளை மீறியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருநகரக் காவற்துறையினருடன் (Metropolitan Police) இணைந்து முன்னெடுக்கப்பட்ட கூட்டு ரோந்து நடவடிக்கையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்:

இச்சோதனையின் போது 3 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா, 3,000 பவுண்டுகள் ரொக்கப் பணம், 7 ஆயுதங்கள், 14 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் போலி ஆவணங்கள் என்பன காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக வாகனங்களைச் செலுத்துபவர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என இந்த நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய சார்ஜென்ட் டீன் யங் எச்சரித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin