உக்ரைன் – ஜேர்மனி இடையே 8.5 பில்லியன் யூரோ பெறுமதியான 15 முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
உக்ரைன் மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில், 8.5 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இவ் ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு மற்றும் தொழிற்துறை உறவுகள் மேலும் பலப்படுத்தப்படவுள்ளன.
ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்கள்:
ட்ரோன் எதிர்ப்பு கட்டமைப்பு: இடைமறிக்கும் ட்ரோன்கள் (Interceptors) மற்றும் சிறிய ரக ஏவுகணைகள்.
தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்கள்:
அதிநவீன ராடார்கள், தரைவழி தானியங்கி வாகனங்கள் (UGVs) மற்றும் பீரங்கிப் படைகளுக்கான தளவாடங்கள்.
வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை உற்பத்தி:
வான் பாதுகாப்பை முழுமையாக வலுப்படுத்துவதுடன், ஜேர்மனியில் பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ‘FREYJA’ திட்டம் சார்ந்த நடவடிக்கைகள்.
எரிசக்தி துறைக்கான ஆதரவு:
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் எரிசக்தி துறைக்கான கட்டமைப்பு உதவிகள்.
போர் தொடங்கிய காலத்திலிருந்தே உக்ரைனுக்கு ஜேர்மனி தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகிறது.
தற்போது வெறும் இராணுவ உதவிகளைப் பெறுவதோடு நின்றுவிடாமல், ஜேர்மனிய நிறுவனங்களுக்கு நேரடி பாதுகாப்பு மற்றும் தொழிற்துறை கொள்வனவு ஓடர்களை (Orders) உக்ரைன் வழங்கி வருகிறது.
இது ஜேர்மனிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனுக்கு மிக அவசியமாக உள்ளன.
அந்த வகையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள இந்த 15 ஒப்பந்தங்கள், அந்நாட்டின் வான்பாதுகாப்பை தரைமட்டத்திலிருந்து பலப்படுத்துவதுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான கூட்டு ஆயுத உற்பத்தியையும் விரிவுபடுத்துகின்றன.

