டுபாய் – டெல் அவிவ் விமானத்தில் விமானிகளுக்கு இடையே மோதல்

டுபாய் – டெல் அவிவ் விமானத்தில் விமானிகளுக்கு இடையே மோதல்; சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கம்!

டுபாயிலிருந்து (Dubaï) இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel-Aviv) நகரை நோக்கிப் பயணித்த ‘பிளைடுபாய்’ (FlyDubai) நிறுவனத்தின் பயணிகள் விமானமொன்று, நடுவானில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று (புதன்கிழமை) சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் பென் குரியன் (Ben Gourion) விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ‘பிளைடுபாய் FZ 1073’ விமானம், நடுவானில் முதலில் ‘7700’ என்ற சர்வதேச அவசரக் குறியீட்டையும், பின்னர் விமானம் கடத்தப்படுவதைக் குறிக்கும் ‘7500’ என்ற குறியீட்டையும் வெளியிட்டுள்ளது.

விமானம் தற்காலிகமாக ரேடார் கண்காணிப்பிலிருந்து மறைந்து, திடீரெனக் கீழ்நோக்கி வீழ்ந்ததையடுத்து, இஸ்ரேலிய இராணுவப் போர் விமானங்கள் அவசரமாக வானில் ஏவப்பட்டன.

இஸ்ரேலியப் பாதுகாப்புத் தரப்புகளின் தகவல்படி, விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த அவசரக் குறியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

“விமானத்தில் திடீரென அலறல் சத்தங்கள் கேட்டன. விமானிகளின் அறைக் (cockpit) கதவு திறக்கப்பட்டபோது அங்கே இரத்தத்தைக் கண்டோம்; யாரோ ஒரு விமானியைச் சட்டைப்பைக் கத்தியால் (couteau de poche) குத்தியிருந்தனர்” எனப் பயணியொருவர் இஸ்ரேலிய ஊடகமான ‘சானல் 12’ இற்குத் தெரிவித்தார்.

பயணிகளும் சிப்பந்திகளும் இணைந்து அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

“ஒரு விமானி கத்தியால் குத்தப்பட்டுக் கடுமையாகக் காயமடைந்ததையும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்ததையும் கண்டு நாங்கள் மிகவும் அச்சமடைந்தோம்” என மற்றொரு பயணி தனது திகிலான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

எனினும், இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள பிளைடுபாய் நிறுவனம், “ஒருவர் மயக்கமடையும் வரை விமானிகளுக்கு இடையே மோதல் இடம்பெற்றது.

ஆனால், இதுவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல் (பயங்கரவாதச் செயல்) அல்ல” என உறுதியளித்துள்ளதுடன், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இறுதியில் இந்த விமானம் சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. “நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இஸ்ரேலியப் பயணிகளைப் பாதுகாப்பாக நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன” என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin