அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் காலத்தில், அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விதிகளை கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளையும் மேலும் இறுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 300,000 ஆக உள்ள நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 2028ஆம் ஆண்டளவில் 225,000 ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய விதிகளின்படி, சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அவுஸ்திரேலியாவில் பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், அவர்கள் பணிபுரியக்கூடிய மணித்தியாலங்கள் மாணவர் பயிலும் பாடநெறியைப் பொறுத்து மாறுபடுகின்றன.

மேலும், 18 வயதிற்குட்பட்ட தங்களின் சார்ந்திருக்கும் குழந்தைகளையும் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வர முடியும்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் குடியேற்றத்தை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் தீவிர வலதுசாரி One Nation கட்சி, மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை 750,000 ஆல் குறைக்க வேண்டும் என இந்த வாரம் தெரிவித்துள்ளது.

One Nation கட்சி தனது கொள்கையை “Australia First” அணுகுமுறையாக விவரித்துள்ளதுடன், அதன் சில கொள்கைகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுடன் ஒப்பிடப்படுகின்றன.

ஆரம்ப மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை ஆண்டுக்கு 130,000 ஆகக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும், இந்தத் திட்டம் ஆண்டுதோறும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர், 2022 பெப்ரவரியில் அவுஸ்திரேலியா தனது சர்வதேச எல்லைகளை மீண்டும் திறந்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தற்காலிக திறமையான தொழிலாளர்களின் வருகையால் குடியேற்றம் கணிசமாக அதிகரித்தது.

அதிகரித்த குடியேற்றம் வீடமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சமூக ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகர குடியேற்ற எண்ணிக்கை குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவின் நிகர வெளிநாட்டு குடியேற்றம் 306,000 ஆக பதிவாகியுள்ளது.

இதில் பாதிக்கும் மேற்பட்டோர் சர்வதேச மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் 518,000 ஆக உச்சத்தை எட்டிய நிகர குடியேற்றம், 2024ஆம் ஆண்டில் 429,000 ஆகக் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin