அரச சேவையில் புதிதாக இணையும் நபர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அரச சேவையில் புதிதாக இணையும் நபர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, சிறுவர்களுடன் நேரடியாகப் பணியாற்றக்கூடிய அரசுப் பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படுபவர்கள், சிறுவர் தொடர்பான குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதற்கான அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

 

இந்த சான்றிதழை பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெறும் நடைமுறை தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த நடைமுறை புதிதாக அரச சேவையில் இணைவோருக்கு மட்டுமன்றி, ஏற்கனவே அரச சேவையில் உள்ள அதிகாரிகளுக்கும் பொருந்தக்கூடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, சேவைத் திறன் தடைகள், சம்பள உயர்வுகள் மற்றும் பிற சேவை முன்னேற்ற நடவடிக்கைகளின் போது, குறிப்பிட்ட காலத்திற்கான சான்றிதழை புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறுவர்களுடன் தொடர்புடைய பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதும், சிறுவர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin