BAPS இந்துக் கோயில் கட்டுமானப் பணிகளில் கொத்தடிமை முறை?

BAPS இந்துக் கோயில் கட்டுமானப் பணிகளில் கொத்தடிமை முறை?

கடவுச்சீட்டுப் பறிமுதல் மற்றும் அச்சுறுத்தல்கள் எனப் பலத்த சந்தேகங்கள்!

ஈபிள் கோபுரப் (Tour Eiffel) பணியாளர்களில் பெண்களைப் புறக்கணித்த விவகாரத்தைத் தொடர்ந்து, ‘பாப்ஸ்’ (BAPS – Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) என்ற இந்துமத அமைப்பு தற்போது மற்றொரு பாரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

 

பாரிஸ் புறநகர்ப் பகுதியான ‘புஸ்ஸி-சென்-ஜோர்ஜ்’ (Bussy-Saint-Georges) நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இந்துக் கோயில் கட்டுமானப் பணிகளிலேயே இக்குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

3500 சதுர மீற்றர் பரப்பளவில், முழுமையாகக் கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கோயிலானது

 

பிரான்சின் மிகப்பெரிய பாரம்பரிய இந்துக் கோயிலாகக் கருதப்படுகிறது (லண்டனில் உள்ள BAPS கோயிலைத் தவிர்த்துப் பார்த்தால் இதுவே ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்து ஆலயமாகும்).

 

கடந்த செப்டெம்பர் 6-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அமைப்பின் ஆன்மீகத் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் (Mahant Swami Maharaj) தலைமையில் இதன் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

 

கோயில் திறப்பு விழாவின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டாய உழைப்பிற்கு (Travail forcé) உட்படுத்தப்பட்டதாகத் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 

‘சி.ஜி.ரி’ (CGT) தொழிற்சங்கச் செயற்பாட்டாளரான சில்வியான் கோல்ட்ஸ்டீன் (Sylvain Goldstein) இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

 

புலம்பெயர் இந்தியர்களின் அமைப்பான ‘இந்தியன் அலையன்ஸ்’ (Indian Alliance) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (OIT) ஆகியவற்றின் தகவல்களை மேற்கோள்காட்டி அவர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகள் (Passeports) பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

 

மேலும், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், வாரத்தில் 6 நாட்கள், நாளொன்றுக்கு 12 முதல் 15 மணித்தியாலங்கள் வரை வேலை வாங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

இவ்வளவு கடின உழைப்பிற்கும் வெறும் 600 முதல் 700 யூரோக்கள் மட்டுமே இந்தியாவில் வைத்து மாதச்சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

ஆயினும், மொழிப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசாரணைகள் சவாலாக அமைந்துள்ளதால், இதுவரை எவ்வித உறுதியான பௌதீக ஆதாரங்களும் (Preuves matérielles) கண்டறியப்படவில்லை.

 

சுமார் 21.2 மில்லியன் யூரோக்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தின் பிரதான கட்டுமானப் பணிகளை, பிரெஞ்சு நிறுவனமான ‘வின்சி’யின் (Vinci) துணை நிறுவனமான ‘பாட்டெக்’ (Bateg) முன்னெடுத்திருந்தது.

 

தொழிலாளர் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் (DDETS) சோதனைகளின் போது, அங்குச் சட்டவிரோத வேலைவாய்ப்புகள் எவையும் இடம்பெற்றமைக்கான சுவடுகள் காணப்படவில்லை என அரச அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் ‘மோ’ (Meaux) நகர அரச வழக்குத்தொடுனர் (Parquet) தற்போதைக்கு எவ்வித விசாரணைகளையும் ஆரம்பிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

 

இக்கோயிலின் திறப்பு விழாவிற்கு முன்னரான நிகழ்வுகளில் ‘இல்-து-பிரான்சு’ (Île-de-France) மாகாண சபைத் தலைவி வலேரி பெக்ரெஸ் (Valérie Pécresse) கலந்துகொண்டதுடன்,

 

திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக உரையாற்றியிருந்தார்.

 

இந்நிலையில், தம் மீதான இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என BAPS அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன்,

 

இத்திட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையே தாங்கள் முன்னெடுத்ததாகத் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin