மத்திய கிழக்கு மோதலால் பிரான்ஸில் உயரும் பெட்ரோல், டீசல் விலை!
கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டுநர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் பதற்றமான சூழல் காரணமாக, பிரான்ஸில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிறப்பு வலைத்தளமான ‘Carbu.com’ இன் தரவுகளின்படி, கடந்த புதன்கிழமை அன்று டீசலின் சராசரி விலை ஒரு லிட்டருக்கு 2.291 யூரோவாக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஒரு மாதத்தில் 5.7 சதவீத அதிகரிப்பாகவும், ஓராண்டில் 41.6 சதவீத உயர்வாகவும் உள்ளது;
இதேபோல் யூலைடெட் 95-இ10 ரக பெட்ரோல் சராசரியாக 2.121 யூரோக்களுக்கு விற்கப்படுகிறது.
இந்த தொடர் விலை உயர்வு பிரெஞ்சு நாட்டு குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாகப் பாதித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ‘INSEE’ அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் எரிபொருள்
விலை குறைவாக இருந்தபோதே சுமார் 2.2 மில்லியன் குடும்பங்கள் எரிபொருளுக்காக தங்களது வருடாந்திர வருமானத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாகச் செலவிடும் அபாயத்தில் இருந்தன.
தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தச் சுமை கோடிக்கணக்கான மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் பெட்ரோல் கார் ஒன்றிற்கான மாதாந்திர எரிபொருள் செலவு 25 யூரோக்கள் அதிகரித்து,
ஒரு வாகனத்திற்கு சராசரியாக 137 யூரோக்களை எட்டியுள்ளதாக ‘Roole Data’ தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில், நுகர்வோர் மற்றும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைச் சமாளிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்காக பொருளாதார அமைச்சர் ரோலண்ட் லெஸ்குரே எரிபொருள் விநியோகஸ்தர்களைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.
மறுபுறம், கோடைக்கால வெப்ப அலை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து அரசு அறிவித்த உதவிகள் குறித்து மதிப்பீடு செய்யப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு உறுதி அளித்துள்ளார்.
இருப்பினும், விவசாயிகளுக்கான மானியத் தொகைகள் மற்றும் டீசல் திரும்பப்பெறும் தொகைகள் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்ற விமர்சனங்கள் விவசாய சங்கத் தலைவர்களிடமிருந்து எழுந்துள்ளன.
பிரெஞ்சு அரசாங்கமும் போக்குவரத்துத் துறையைத் தவிர்த்து மற்ற துறைசார் உதவிகளை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு இப்போதைக்குக் குறைய வாய்ப்பில்லை என்பதால், நிலைமை மேலும் மோசமடைந்தால் லிட்டர் ஒன்றுக்கு 2.40 யூரோவைக் கடக்கக்கூடும்
என்று லெக்லெர்க் குழுமத்தின் தலைவர் மைக்கேல்-எட்வார்ட் லெக்லெர்க் எச்சரித்துள்ளார்.
விலை தாங்க முடியாத நிலையை எட்டும்போது அரசாங்கம் எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

