15 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக வலைதளத் தடை!!

ஐரோப்பிய ஆணையத்திடம் அவசரக் கோரிக்கை விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாக்கும் நோக்கில், 15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்குப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பிரான்சில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட சமூக வலைதளத் தடைச் சட்டம் நாட்டின் அரசியலமைப்புச் பேரவையால் நிராகரிக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறாமல் திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் வரும் இலையுதிர்காலத்தில் இதற்கான வழியை மீண்டும் கண்டறிய மக்ரோன் தீவிரமுடன் செயல்பட்டு வருகிறார்.

பிரான்ஸ் தன் இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதிக்கு வந்துள்ள நிலையில், அதிபர் மக்ரோன் தனது பிரசாரத்தின் முக்கிய அம்சமாகக் கருதும் இந்தச் சமூக வலைதளத் தடையைத் தனது பதவிக்காலம் முடிவதற்குள் பிரான்சில் முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்.

எனினும், தனிப்பட்ட ஒரு நாட்டைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியம் முழுவதுமுள்ள அனைத்து நாடுகளிலும்
ஒரே சீரான சட்டத்தைக் கொண்டுவந்து 15 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக வலைதளத் தடை விதிப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடையை நடைமுறைப்படுத்த வலுவான தேசிய மற்றும் ஐரோப்பிய அளவிலான வயதுச் சரிபார்ப்பு முறைகள் அவசியமெனக் குறிப்பிட்ட மக்ரோன், ஆபத்தான அடிமையாக்கும் அம்சங்களை முறைப்படுத்துதல் மற்றும் பயன்பாட்டு நேர வரம்புகள் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளையும் இந்தச் சட்டம் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கோடைக்குப் பிறகு இதுகுறித்த புதிய திட்டங்களை வெளியிடவுள்ள நிலையில், பிரெஞ்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்பக் கட்டுப்பாடுகளை துல்லியமாக வரையறுத்து இந்தத் தடையை வெற்றிகரமாகச் செயல்படுத்த மக்ரோன் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Recommended For You

About the Author: admin