ஓகஸ்ட் 1 முதல் பிரான்ஸ் மக்களின் பணப்பையில் நடக்கப் போகும் அதிரடி மாற்றங்கள்:
வருகின்ற ஓ கஸ்ட் 1-ஆம் திகதி முதல் பிரெஞ்சு மக்களின் அன்றாடப் பொருளாதார வாழ்வில் பல புதிய மாற்றங்களை அரசு நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளது. சில மாற்றங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியையும், சில மாற்றங்கள் கூடுதல் சுமையையும் தரக் காத்திருக்கின்றன.
ஓகஸ்ட் 1 முதல் பிரான்சின் மிகவும் பிரபலமான ‘லிவ்ர் ஆ’ (Livret A) சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதம் 1.5 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. இந்தச் சிறிய உயர்வு, மக்களை அதிக அளவில் சேமிக்க ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, குறைந்த வருமானம் பெறுவோருக்கான ‘மக்கள் சேமிப்புக் கணக்கின்’ (Livret d’Épargne Populaire – LEP) வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இறுதியாக 2.5 சதவீதம் என்ற மாபெரும் உச்சத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான செலவுகளை ஈடுகட்ட வழங்கப்படும் ‘பள்ளிக்கூடத் திறப்பு நிதியுதவி’ (Allocation de Rentrée Scolaire – ARS) எப்போது வழங்கப்படும் என்ற திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 18 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஓகஸ்ட் 18-ஆம் திகதி முதல் இந்த நிதியுதவி வழங்கப்படும். மயோட் (Mayotte) மற்றும் ரியூனியன் (La Réunion) தீவுகளில் வசிப்போருக்கு ஓகஸ்ட் 4 அன்றே இது கிடைத்துவிடும். குழந்தையின் வயதைப் பொறுத்து இந்த உதவித்தொகை 426.87 யூரோக்கள் முதல் 466.02 யூரோக்கள் வரை வழங்கப்படும்.
பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பதற்காகச் செய்யப்படும் எரிச்சலூட்டும் தொலைபேசி வழி வணிக அழைப்புகளுக்கு ஆகஸ்ட் 11-ஆம் திகதி முதல் முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. நீங்கள் முன்கூட்டியே ஒப்புதல் அளித்திருந்தாலோ அல்லது குறிப்பிட்ட நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருந்தாலோ மட்டுமே அவர்கள் உங்களை அழைக்க முடியும்.
ஒருவேளை அவர்கள் அழைப்பதாக இருந்தாலும், கடுமையான நேரக் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதாவது, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மட்டுமே அழைக்க அனுமதி உண்டு. சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் அழைப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது.
நிதியுதவிகளும், வட்டி உயர்வுகளும் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மின்சாரக் கட்டண உயர்வு மக்கள் தலையில் இடியாக இறங்கியுள்ளது. ஓகஸ்ட் 1 முதல் மின்சாரக் கட்டணம் 2.5 சதவீதம் அதிரடியாக உயர்த்தப்படவுள்ளது. எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (Commission de régulation de l’énergie) இந்த முடிவால், சுமார் 2 கோடி பிரெஞ்சு மக்களின் ஆண்டு மின்சாரக் கட்டணத்தில் வரியுடன் சேர்த்து (TTC) சராசரியாக 26 யூரோக்கள் கூடுதல் சுமை ஏற்படவுள்ளது.

