பயணிகளின் மாபெரும் ஆதரவால் வரலாற்றுச் சாதனை

பயணிகளின் மாபெரும் ஆதரவால் வரலாற்றுச் சாதனை: 1.2 பில்லியன் யூரோக்கள் லாபத்துடன் பிரான்சின் தொடருந்து நிறுவனமான எஸ்.என்.சி.எப் (SNCF) இமாலயப் பாய்ச்சல்!

பிரான்சின் தேசியத் தொடருந்து நிறுவனமான எஸ்.என்.சி.எப் (SNCF) தொடர்ச்சியாக 9-வது முறையாகத் தனது அரையாண்டு நிதிநிலையில் மாபெரும் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. பயணிகளின் வரலாறு காணாத வருகையால் நிரம்பி வழியும் தொடருந்துகளே இந்த இமாலய வெற்றிக்கு முழுமுதல் காரணமாகும்!

 

நடப்பு 2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை) இந்நிறுவனம் 1.2 பில்லியன் யூரோக்கள் நிகர லாபத்தை (Résultat net) ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 26.3% அதிகமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இது 739% என்ற அதிரடியான வளர்ச்சியாகும்!

 

“கடந்த ஆறு ஆண்டுகளில் இவ்வளவு பெரியதொரு மாபெரும் சாதனையை நாங்கள் கண்டதில்லை” என நிறுவனத்தின் உத்தி மற்றும் நிதியியல் பிரிவின் துணைப் பொது மேலாளர் லாரன்ட் ட்ரெவிசானி (Laurent Trevisani) பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 2 சதவீதம் உயர்ந்து 21.9 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது.

 

இந்த மாபெரும் லாபத்திற்குக் காரணம், எல்லா வகையான தொடருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதுதான் . அதிவேகத் தொடருந்துகளில் (TGV) 2.8%, புறநகர்த் தொடருந்துகளில் (Transiliens) 4.1%, மற்றும் பிராந்தியத் தொடருந்துகளில் (TER) 2.3% எனப் பயணிகளின் வருகை அமோகமாக உயர்ந்துள்ளது.

 

பயணிகள் போக்குவரத்துப் பிரிவான SNCF Voyageurs ஒட்டுமொத்த நிறுவனத்தையும் இழுத்துச் செல்லும் மாபெரும் ‘இழுவை இயந்திரமாக’ (Locomotive)ச் செயல்பட்டுள்ளது. இந்த லாபத்தின் மூலம் நிறுவனத்தின் 690 மில்லியன் யூரோக்கள் கடன் அடைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னமும் 23.6 பில்லியன் யூரோக்கள் கடன் நிலுவையில் உள்ளது.

 

“கிடைத்த லாபத்தில் 95 சதவீதம் பிரான்சின் தொடருந்து வலைப்பின்னலிலேயே (Réseau français) மறுமுதலீடு செய்யப்படுகிறது” என நிறுவனத்தின் தலைவர் ஜோன் காஸ்டெக்ஸ் (Jean Castex) மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த அரையாண்டில் மட்டும் 1.5 பில்லியன் யூரோக்கள் வலைப்பின்னலைப் புதுப்பிக்கவும் , 1.8 பில்லியன் யூரோக்கள் புதிய தொடருந்துப் பெட்டிகளை வாங்கவும் புனரமைக்கவும் செலவிடப்பட்டுள்ளன.

 

தொடர்ச்சியான புயல்கள் மற்றும் கதிர் வெம்மையலை (Canicule) காரணமாக இந்த ஆண்டு நிறுவனம் சுமார் 70 மில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. தற்போதும் ஜிரோண்ட் (Gironde) காட்டுத்தீயால் போர்டோ நகருக்குத் தெற்கே தொடருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

இத்தகைய இயற்கைப் பேரிடர்களையும் பருவநிலை மாற்றங்களையும் எதிர்கொள்ளும் வகையில், 55 டிகிரி செல்சியஸ் கடும் வெப்பத்தைக் கூடத் தாங்கக்கூடிய அதிநவீன ‘டி.ஜி.வி எம்’ (TGV M) ரக அதிவேகத் தொடருந்துகள் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தொடருந்துப் போக்குவரத்தில் இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை!

Recommended For You

About the Author: admin