பிரான்சின் அகதிகளுக்கான தேசிய நீதிமன்றம் (CNDA) புதிய வளாகத்திற்கு மாற்றம்

பிரான்சின் அகதிகளுக்கான தேசிய நீதிமன்றம் (CNDA) புதிய வளாகத்திற்கு மாற்றம் – செப்டம்பர் முதல் புதிய முகவரியில் இயங்கும்!

பிரான்சில் அரசியல் தஞ்சம் கோருவோரின் மேன்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அகதிகளுக்கான தேசிய நீதிமன்றம் (CNDA), பல ஆண்டுகளாக இயங்கி வந்த பழைய முகவரியிலிருந்து விடைபெற்று, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் புதியதொரு கட்டடத் தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

 

எதிர்வரும் ஓகஸ்ட் 24-ஆம் திகதி (24 Août 2026) முதலாகவே இந்த இடமாற்றப் பணிகள் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன. எனவே, செப்டம்பர் மாதம் முதல் நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும், விசாரணைகளும் (Audiences) இந்தப் புதிய முகவரியிலேயே முழுமையாக முன்னெடுக்கப்படும்.

 

இதுவரை ’35, Rue Cuvier, 93558 Montreuil என்ற முகவரியில் இயங்கி வந்த இந்த நீதிமன்ற அமைப்பு, இனி மொந்த்ரெய் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள ‘Place du Général de Gaulle பகுதிக்கு செல்கிறது. புதிய நீதிமன்றத்தின் முழுமையான முகவரி:Cour nationale du droit d’asile (CNDA)13, Place du Général de Gaulle93100 Montreuil

 

பாரிஸ் நகரிலிருந்து இந்தப் புதிய அலுவலகத்திற்குச் செல்வது மிகவும் சுலபமானதாகும். பாரிஸ் நகரின் எந்தப் பகுதியிலிருந்தாலும் தடம் 9-ஐக் (Ligne 9) கொண்ட சுரங்கப்பாதை தொடருந்தில் ஏறி’ Mairie de Montreuil திசையை நோக்கிப் பயணித்து, Croix de Chavaux என்ற தொடருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும்.இந்த நிலையத்தின் வெளியேறும் பாதைகள் நேரடியாக ‘ஜெனரல் து கோல்’ சதுக்கத்திற்கே (Place du Général de Gaulle) உங்களை அழைத்துச் செல்லும். அங்கிருந்து ஓரிரு நிமிட நடையில் நீதிமன்றத்தை அடைந்துவிடலாம்.

 

சுரங்க தொடருந்துப் பயணத்தைத் தவிர்த்து பேருந்தில் பயணிக்க விரும்புவோர், 102, 115, 122, அல்லது 127 ஆகிய இலக்கங்களைக் கொண்ட பேருந்துகளில் பயணித்து, Croix de Chavaux – Métro நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

 

தஞ்சம் கோரும் விண்ணப்பதாரர்கள் ,எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் தாக்கல் செய்யும் மேன்முறையீடுகளுக்கும் (Recours), நேர்முக விசாரணைகளுக்கும், மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் இந்தப் புதிய போக்குவரத்து ஒழுங்கைப் பின்பற்றிச் செல்வது மிகவும் முக்கியமானதாகும்.

Recommended For You

About the Author: admin