பிரான்ஸ் போர் வானூர்தி ஓட்டி சீனாவுக்கு உளவு பார்த்தாரா?

பிரான்ஸ் போர் வானூர்தி ஓட்டி சீனாவுக்கு உளவு பார்த்தாரா? தேசத்துரோக வழக்கில் சிக்கிய வலையொளிப் பிரபலம் ‘பியர்-ஹென்றி சுவே’ – ஓர் அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பிரான்ஸ் நாட்டின் தற்காப்பு அரணாக விளங்கிய முன்னாள் போர் வானூர்தி விமானி (Pilote de chasse) ஒருவர், சீனாவுக்கு உளவு பார்த்ததாக (Espionnage) எழுந்துள்ள குற்றச்சாட்டு ஒட்டுமொத்தப் பிரான்சையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘அதே சுவே’ (ATÉ CHUET) என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் அறியப்படும் பியர்-ஹென்றி சுவே (Pierre-Henri Chuet) என்பவரே இந்தப் பெரும் தேசத்துரோக வழக்கில் அறங்கூற்றுமன்றக் கண்காணிப்பின் (Contrôle judiciaire) கீழ் வைக்கப்பட்டுள்ளார். அவர் யார்? அவர் செய்த மாபெரும் துரோகம் என்ன? .

 

பிரான்சு வான்படையின் (Armée de l’Air) வானூர்தி ஓட்டியின் மகனாகப் பிறந்த இவர், வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு படைத்தளத்தில்தான் (Base militaire) வளர்ந்தார். தனது 14-வது வயதிலேயே வானூர்தியை இயக்கத் தொடங்கிய ஒரு திறமைசாலி. 2006-ஆம் ஆண்டு தனது 19-வது வயதில் பிரெஞ்சுக் கடற்படையின் வானூர்தியியல் பிரிவில் (Aéronautique navale) இணைந்தார். பின்னர், சிறப்புத் திட்டத்தின் கீழ் அமெரிக்கக் கடற்படைக்கு (US Navy) அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் அங்கே உயரிய பயிற்சி பெற்றார்.

 

2015 நவம்பர் தாக்குதல்களுக்குப் பிறகு ஈராக் (Irak) உள்ளிட்ட பல வெளிநாட்டுப் போர்க்களங்களில் பிரான்ஸ் நாட்டின் சார்பாகப் பணியாற்றியவர். ஏழு ஆண்டுகள் போர்ப் படையில் (Unité de combat) தீவிரமாகப் பணியாற்றிய பின், ‘ஏர் கனடா’ (Air Canada) நிறுவனத்தில் பயணிகள் வானூர்தி ஓட்டியாகத் தனது குடிமைப் (Civil) பணியைத் தொடர்ந்தார்.

 

கோவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்திற்குச் சற்று முன்பு, 2020 பிப்ரவரியில் அவர் தொடங்கிய வலையொளி (YouTube) அலைவரிசை, வானூர்தி உலகக் குறிப்புகளைப் பகிர்ந்து சுமார் 5,66,000 பின்தொடர்பவர்களைப் பெற்றுத் தந்தது. பூக்களின் மகரந்தத்தால் அவருக்கு ஏற்படும் தும்மல் காரணமாகவே அவருக்கு ‘அதே’ (ATÉ) என்ற பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டது.

 

நாட்டின் பாதுகாப்பைக் காக்க வேண்டியவரே அதனை விற்கத் துணிந்ததாகப் புகார்கள் எழ, கடந்த 2025 ஏப்ரல் 9-ஆம் தேதி பாரிஸ் அரசுத் தரப்பு வழக்காடு மன்றம் (Parquet de Paris) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த ஜூலை 21-ஆம் திகதி அவர் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான பொது அமைப்பால் (DGSI) அதிரடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். தென்மேற்குப் பிரான்சிலுள்ள அவரது வீட்டில் நுண்ணறிவுப் பிரிவினர் தீவிரச் சோதனைகளை நடத்தினர்.

 

தற்போது அவர் மீது, “தேசியப் பாதுகாப்பு மறைபொருள்களை வெளியிட்டமை” (Divulgation de secret de défense nationale), “வெளிநாட்டுச் சக்தியுடன் கைகோர்த்தமை” (Intelligence avec une puissance étrangère), மற்றும் “தேசத்தின் அடிப்படை நலன்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வெளிநாட்டிற்கு வழங்கியமை” ஆகிய கொடும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு அறங்கூற்றுமன்ற நடுவர் (Juge d’instruction) முன்பு விசாரணை தொடர்கிறது.

 

சீனாவின் மக்கள் விடுதலைப் படை (APL) வானூர்தி ஓட்டிகளுக்குப் பயிற்சி அளித்த மேற்கத்திய வீரர்களில் இவரும் ஒருவர் என்பதே புலனாய்வாளர்களின் முதன்மையான ஐயமாகும்.

 

சீனா இந்தச் சதியை மிகவும் தந்திரமாக அரங்கேற்றியுள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘பறக்கும் சோதனைப் பயிற்சி அகாடமி’ (TFASA) என்ற நிறுவனத்தின் மூலம், மேற்கத்திய நாடுகளின் முன்னாள் போர் வானூர்தி ஓட்டிகளை மாதம் 30,000 டொ லர்கள் வரை (சுமார் 25,000 யூரோக்கள்) பெரும் ஊதியம் கொடுத்து சீனாவுக்குப் பணிக்கு அமர்த்தியுள்ளது. அங்குச் சென்றதும், அவர்களைச் சீனாவின் வானூர்தியியல் தொழில்துறை அமைப்பான ‘ஏவிக்’ (AVIC) தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

 

சீனாவின் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், தங்கள் வானூர்தி ஓட்டிகளுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமல்ல; மாறாக, மேற்கத்தியப் படைகளின் போர்த் தந்திரங்கள், தாக்குதல் முறைகள் மற்றும் செயல்படும் விதம் (Procédures d’engagement et modes opératoires) குறித்த மிக நுட்பமான நுண்ணறிவுத் தகவல்களைத் திரட்டுவதே ஆகும்.

 

தன்னைக் காத்து வளர்த்த தேசத்தின் பாதுகாப்புப் படிமுறைகளைப் பல ஆயிரம் டொலர்களுக்காகச் சீனாவிடம் இந்த வலையொளிப் பிரபலம் விற்றாரா என்பது , அறங்கூற்றுமன்ற விசாரணை முடிவடையும் போதுதான் உறுதியாக தெரியவரும்.

Recommended For You

About the Author: admin