‘மறுமலர்ச்சி’ (Renaissance) என்ற பெயருக்குச் சொந்தம் கொண்டாடும் மோதல்: கேப்ரியல் அட்டல் மற்றும் மரின் லு பென் கட்சிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கிய ‘ரெனேசான்ஸ்’ (Renaissance – மறுமலர்ச்சி) என்ற கட்சியின் பெயரை, மரின் லு பென்னின் (Marine Le Pen) தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசிய அணி’ (Rassemblement national – RN) தனது தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளதற்கு எதிராகப் பாரிஸ் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை, ஜூலை 27) அவசரக் கால விசாரணை நடைபெறவுள்ளது.
கடந்த ஜூலை 7-ஆம் திகதியன்று, மரின் லு பென் தனது புதிய தேர்தல் பிரச்சாரத்திற்கான சுவரொட்டியை வெளியிட்டார். அதில், “பிரான்சுக்காக – ஒரு மறுமலர்ச்சி” (Pour la France – La Renaissance) என்ற முழக்கம் அப்பட்டமாக இடம்பெற்றிருந்தது.
தற்போதைய ஆளும் தரப்பான கப்ரியல் அட்டல் (Gabriel Attal) தலைமையிலான தங்களது கட்சியின் அரசியல் அடையாளத்தையும், பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரையையும் (Marque) திருடி, வாக்காளர்கள் மத்தியில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ‘தேசிய அணி’ கட்சி இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“இந்த அத்துமீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், காப்புரிமை மீறல் மற்றும் எங்களது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக (Contrefaçon de marque et parasitisme) உரிய இழப்பீடு கோரியும் தேவையான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,” என கப்ரியல் அட்டலின் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மரின் லு பென்னின் தேர்தல் பிரச்சாரத் தொடர்பாளர் லாரன்ட் ஜேக்கபெல்லி (Laurent Jacobelli) விளக்கமளிக்கையில், “நாங்கள் குறிப்பிடும் ‘மறுமலர்ச்சி’ என்பது பிரான்சின் கல்வி, வளர்ச்சி மற்றும் பொது அமைதியை மீண்டும் உருவாக்குவதாகும். அது பல சிறந்த கலைஞர்கள் தோன்றிய ஒரு அழகான வரலாற்றுப் காலத்தைக் குறிக்கிறதே தவிர, மோசமான அரசியல் நினைவுகளை அல்ல,” எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கு குறித்து ஏளனமாகப் பதிலளித்துள்ள தேசிய அணி கட்சி, “எதிர்காலத்தில் திரு. அட்டல், எட்வர்ட் பிலிப்புடன் (Édouard Philippe) கூட்டணி அமைக்கும்போது ‘ஒன்றிணைதல்’ (Rassemblement) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், நாங்கள் நிச்சயமாக அவர் மீது வழக்குத் தொடர மாட்டோம் எனச் சத்தியம் செய்கிறோம்,” என மிக நகைச்சுவையாகக் கிண்டலடித்துள்ளது.


