உறைந்த காய்கறிகளா? கலன்களில் அடைக்கப்பட்டவையா? உடல்நலத்திற்கு எது சிறந்தது?
நேரமின்மை அல்லது விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய காய்கறிகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது இன்றைய அவசர உலகில் பலருக்கும் சாத்தியமில்லாமல் போகலாம். இந்நிலையில், உறைந்த (Surgelé) காய்கறிகள் அல்லது கலன்களில் அடைக்கப்பட்ட (Conserve) காய்கறிகள் – இவற்றுள் எது சிறந்த மாற்று என்ற கேள்வி எழுகிறது.
உடல்நலத்தை மனதில்கொண்டு பார்த்தால், மருத்துவ உலகின் முதல் தேர்வு உறைந்த காய்கறிகளே! “உறைந்த காய்கறிகளில் புதிய காய்கறிகளுக்கு இணையான ஊட்டச்சத்துகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. சில நேரங்களில் நீண்ட தூரம் பயணித்து வரும் புதிய காய்கறிகளை விட, பறித்த உடனேயே உறைவிப்பானுக்குச் செல்லும் காய்கறிகளில் அதிக உயிர்ச்சத்துகள் (Vitamines) தக்கவைக்கப்படுகின்றன,” என உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
கலன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள்: ரசாயனங்கள் உள்ளதா? ஆபத்தா?
நடைமுறை வாழ்வில், கலன்களில் (Tins/Cans) அடைக்கப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது; பணத்தையும் மிச்சப்படுத்தும். ஆனால், இவை ஆரோக்கியமானவையா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
கலன்களில் உள்ள காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க இரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை; மாறாக அதிக வெப்பத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு காற்றுப்புகாமல் அடைக்கப்படுகின்றன. இதனால் இவற்றின் நார்ச்சத்து (Fibres) மட்டுமே முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது; அதிக வெப்பத்தால் வைட்டமின் சத்துகள் பெருமளவு அழிந்துவிடுகின்றன. மேலும், இவற்றில் சில மறைமுகமான சிக்கல்களும் உள்ளன:
உப்பு மற்றும் சர்க்கரை: இவை சுவைக்காகவும் நிலைத்தன்மைக்காகவும் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. சில கலன்களில் 7 கிராம் வரை சர்க்கரை சேர்க்கப்படுகிறது; இது நாம் தேநீரில் கலக்கும் ஒரு சர்க்கரைத் துண்டை விட அதிகப்படியான அளவாகும்.
BPA ரசாயன ஆபத்து: சில பழைய தயாரிப்பு முறைகளில் கலன்களின் உட்புறப் பூச்சில் பி.பி.ஏ (BPA – Bisphenol A) என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனவே, வாங்கும்போதே ‘BPA-Free’ என குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதி செய்வது அவசியம்.
ஆகவே, தவிர்க்க முடியாத காரணங்களால் அடைக்கப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்த நேர்ந்தால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் நன்றாகப் பலமுறை நீரில் கழுவுவது கட்டாயமாகும்.
வீட்டிலேயே காய்கறிகளை உறைய வைப்பது எப்படி?
கடைகளில் வாங்குவதைத் தவிர்த்து, நாமே வீட்டிலேயே காய்கறிகளைப் பதப்படுத்தி உறைய வைப்பது பாதுகாப்பான மற்றும் சிறந்த வழியாகும்.
பச்சைப்பட்டாணி அல்லது பிற பச்சைக் காய்கறிகளை ஓரிரு நிமிடங்கள் கொதிநீரில் இட்டு வெதுப்பிய (Blanching) பின், உடனடியாக அவற்றை எடுத்து குளிர்ந்த நீரில் போட வேண்டும்.
பின்னர், அவற்றை ஒரு சுத்தமான துணியில் ஈரம் போக நன்றாகத் துடைத்து உலர்த்த வேண்டும். அப்போதுதான் சேமிப்புப் பைகளுக்குள் பனிக்கட்டிகள் (Cristalliser) உருவாகாமல் இருக்கும்.
இந்த எளிய வழிமுறைகளுக்குப் பிறகு, உங்கள் காய்கறிகளை உறைவிப்பானில் (Congélateur) பல மாதங்களுக்குப் பத்திரமாகச் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்! “அவை புதியவையோ, உறைந்தவையோ… காய்கறிகளைத் தொடர்ந்து நமது உணவில் சேர்த்துக்கொள்வதே ஆரோக்கியத்திற்கான முதல் படியாகும்” என்பதை மட்டும் மறவாதீர்கள்.

