ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின்’ (Digital Markets Act) கீழ் கூகுள் (Google) நிறுவனத்திற்கு அண்மையில் விதிக்கப்பட்ட 890 மில்லியன் யூரோக்கள் அபராதத்தைத் தொடர்ந்து, ஐரோப்பா முழுவதிலுமிருந்து கூகுளின் போட்டி நிறுவனங்கள் பல பில்லியன் யூரோக்களை இழப்பீடாகக் கோரிப் போர்க்கொடி தூக்கியுள்ளன.
ஜெர்மனி முதல் ஸ்வீடன் வரையிலான பல நிறுவனங்கள் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்களை வென்றுள்ள நிலையில், இந்தப் புதிய அபராதம் அவர்களுக்கு மேலும் பெரிய அளவிலான இழப்பீடுகளைக் கோர மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்த முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க அபராதம் இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது:
கூகுள் தனது தேடுபொறியில் மற்ற நிறுவனங்களின் சேவைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, தங்களது சொந்தச் சேவைகளுக்கே (இணைய வணிகம் , விடுதிகள், போக்குவரத்து மற்றும் விளையாட்டு முடிவுகள்) முன்னுரிமை அளித்துச் சந்தைப் போட்டியைச் சீர்குலைத்துள்ளது. இதனால் பயனர்களுக்குக் கிடைக்க வேண்டிய பல்வேறு தேடல் முடிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
கூகுள் ப்ளே (Google Play) தளத்தில் உள்ள செயலிகளை (Applications) உருவாக்குபவர்கள், பயனர்களை மலிவான மாற்று வழிகளில் கட்டணம் செலுத்தப் பரிந்துரைப்பதைத் திட்டமிட்டுத் தடுத்துள்ளது.
“ஒரு பொருளின் வெற்றி அதன் தரத்தில் இருக்க வேண்டுமே தவிர, தேடுபொறியைக் கட்டுப்படுத்துபவரின் கையில் இருக்கக் கூடாது,” என ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் தெரசா ரிபேரா (Teresa Ribera) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதனை மறுத்துள்ள கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கென்ட் வாக்கர் (Kent Walker), இந்தத் தீர்ப்பு பயனர்களின் நேரடி அனுபவத்தைக் கெடுக்கும் செயல் என வாதிட்டுள்ளார்.
ஏற்கனவே பல ஐரோப்பிய நிறுவனங்கள் கூகுளுக்கு எதிராக நீதிமன்றங்களில் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன:
ஜெர்மனி: கடந்த 2025 நவம்பரில் பெர்லின் நீதிமன்றம் ‘இடாலோ’ (Idealo) என்ற விலை ஒப்பீட்டு நிறுவனத்திற்கு 465 மில்லியன் யூரோக்களை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. அதே பெர்லின் நீதிமன்றத்தில் ‘ப்ரோடக்டோ’ (Producto GmbH) நிறுவனத்திற்கு 107 மில்லியன் யூரோக்கள் கிடைத்தது.
இத்தாலி: ‘ட்ரோவாப்ரேசி’ (Trovaprezzi.it) என்ற தளத்தை நடத்தும் 7பிக்சல் (7Pixel) நிறுவனம், கடந்த மே 2025-ல் கூகுளுக்கு எதிராக 2.97 பில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஸ்வீடன்: ‘க்லார்னா’ (Klarna) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பிரைஸ்ரன்னர்’ (PriceRunner) நிறுவனம், இந்த 2026 ஜூலை மாதம் ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தில் சுமார் 1.7 பில்லியன் யூரோக்களை இழப்பீடாக வென்று சாதனை படைத்துள்ளது.
மேற்கண்ட வழக்குகளெல்லாம் 2017-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையம் கூகுளுக்கு எதிராக ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியமைக்காக (Abus de position dominante) வழங்கிய பழைய தீர்ப்பின் (Article 102) அடிப்படையில் தொடரப்பட்டவை ஆகும்.
இதுவரை நீதிமன்றங்களில் கூகுள் நிறுவனம் தப்பியோடப் பயன்படுத்திய முக்கிய வாதம், “2017-லேயே நாங்கள் எங்கள் அமைப்பில் மாற்றங்களைச் செய்து தவறுகளைத் திருத்திக்கொண்டோம்” என்பதுதான்.
ஆனால், கடந்த வாரம் விதிக்கப்பட்ட இந்தப் புதிய அபராதம் கூகுளின் அந்தப் பொய் வாதத்தைச் சுக்குநூறாக உடைத்துள்ளது. பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டதாகக் கூறிய கூகுள், அதே தவறுகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வந்துள்ளது என்பதை இந்தப் புதிய அபராதம் அம்பலப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் 2017-க்குப் பிந்தைய ஆண்டுகளுக்கும் சேர்த்துப் பல பில்லியன் யூரோக்களைக் கூடுதல் இழப்பீடாகக் கோர இந்தப் புதிய தீர்ப்பு மாபெரும் வழியமைத்துக் கொடுத்துள்ளது. கூகுளுக்கு இது மிகப் பெரிய தலைவலியாக அமையப் போவது உறுதி!

