பாரிஸ் நீதிமன்றம் அருகே இரத்தக்களரி

பாரிஸ் நீதிமன்றம் அருகே இரத்தக்களரி: பெண்களைக் குறிவைத்து கத்திக்குத்துக் தாக்குதல் , மூவர் படுகாயம்! – குற்றவாளியை அடித்து வீழ்த்திய காவலர்!

பாரிசின் நீதிமன்ற வளாகத்தின் அருகே இன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துச் சம்பவம் பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், பணியில் இல்லாத காவலர் ஒருவரின் அசாத்தியத் துணிச்சலால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை, ஜூலை 27) காலை சுமார் 11:30 மணியளவில், பாரிசின் 17-வது வட்டாரத்தில் உள்ள ‘போர் து கிளிச்சி’ (Porte de Clichy) பகுதியில் இந்தச் கொடூரம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள நீதித்துறை வளாகத்திற்கு (Tribunal judiciaire) அருகே வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது, மர்ம நபர் ஒருவர் சமையலறைக்குப் பயன்படுத்தும் இரண்டு கத்திகளைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கு விரைந்த அவசரகால மீட்புக் குழுவினர் (, அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இவர்களில் இருவருக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் (Laurent Nuñez) உறுதியளித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடந்துகொண்டிருந்த வேளையில், சாதாரண உடையில் (En civil) அங்கு வந்துகொண்டிருந்த, பணியில் இல்லாத காவலர் ஒருவர் சற்றும் தாமதிக்காமல் களத்தில் குதித்தார். அருகிலிருந்த நாற்காலி ஒன்றைக் கையில் எடுத்த அவர், அந்த ஆயுதமேந்திய நபரைக் கடுமையாகத் தாக்கி மடக்கிப் பிடித்துள்ளார். மனநலப் பாதிப்புடையவராகக் கருதப்படும் அந்தக் குற்றவாளி தற்போது காவல்துறையின் தீவிர விசாரணையில் உள்ளார்.

குற்றவாளியைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட காவலரின் செயலைப் பாராட்டியுள்ள பாரிஸ் நகர முதல்வர் இம்மானுவேல் க்ரேகுவார் (Emmanuel Grégoire), கொடூரத் தாக்குதலில் காயமடைந்த பெண்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்துப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு விசாரணைகளுக்காக, ‘போர் து கிளிச்சி’ பகுதியில் 13 மற்றும் 14-வது தடங்களுக்கான சுரங்கத் தொடருந்து (Métro) சேவைகளும், T3b தரைவழித் தொடருந்து (Tramway) சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகப் பாரிஸ் போக்குவரத்து நிர்வாகம் (RATP) அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin