“பெண்களைக் கொல்ல அல்லாஹ் என்னை அனுப்பினார்!”: தக்குதலாளி வாக்குமூலம் – களமிறங்கியது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!
பாரிசின் 17-வது வட்டாரத்தில் இன்று காலை அரங்கேறிய கத்திக்குத்துக் கொடூரத்தின் பின்னணியில் மேலும் பல அதிரவைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. “பெண்களைக் கொல்வதற்காகவே அல்லாஹ் என்னை அனுப்பினார்”என முழக்கமிட்டவாறே 31 வயதுடைய அந்த நபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கில்பர்ட்-செஸ்ப்ரான் வீதியில் (Rue Gilbert-Cesbron) நடந்த இந்தத் தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர். இதில் முக்கிய செய்தியாக, காயமடைந்தவர்களில் ஒரு பெண் கர்ப்பிணியாக (Enceinte) உள்ளார் என்ற தகவலை பாரிஸின் 17-வது வட்டாரத்தின் முதல்வர் ஜெஃப்ரி பவுலார்ட் (Geoffroy Boulard) உறுதிப்படுத்தியுள்ளார். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Urgence absolue) அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்-பிலிப் (Jean-Philippe) என்பவர் தனது பதற்றம் விலகாத அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். “வெளியே பெரும் கூச்சல் கேட்டது. முதலில் இது ஏதோ சாதாரண வழிப்பறி அல்லது சண்டை என்றுதான் நினைத்தேன். பின்னர் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது, தோள்பட்டையைப் பிடித்தபடி ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் நிற்பதைக் கண்டேன். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உடனடியாகக் கீழே ஓடிவந்தேன். அங்கு பாதசாரி கடவையில் (Passage piéton) இரண்டு கத்திகளுடன் அந்த நபர் தரையில் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார்,” என அவர் தெரிவித்தார்.
பணியில் இல்லாத துணிச்சலான காவலரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இந்தக் குற்றவாளி, மனநலம் பாதிக்கப்பட்டவராக (Problèmes psychiatriques) இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பெண்களைக் குறிவைத்து அவர் நடத்திய கொடூரத் தாக்குதலும், அதற்காக அவர் உச்சரித்த மதரீதியான வாசகங்களும் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை தேசியப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (Parquet national antiterroriste) தனது நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவந்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

