சீற்றம் கொண்ட ஈரான்!
உக்ரைனுக்கு கடுமையான பதில் அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை!
காஸ்பியன் கடலில் பயணித்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு மாலுமி உயிரிழந்த சம்பவத்திற்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்ச்சி தனது கடுமையான கண்டனத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கியின் இந்தத் தாக்குதல் நடவடிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை (UN Charter) வெளிப்படையாக மீறும் ஆக்கிரமிப்புச் செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலானது இஸ்ரேலின் தூண்டுதலின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது என்றும், ஐரோப்பாவைத் தங்களுக்கு சாதகமாக இந்த ரஷ்ய-உக்ரைன் போருக்குள் இழுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உக்ரைன் ஜனாதிபதியான செலென்ஸ்கி “ஓசியில் உண்டு வாழும் சோம்பேறி” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் விமர்சித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரதிநிதி காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதாக அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு ஈரான் தரப்பில் இருந்து தகுந்த மற்றும் கடுமையான பதில் அளிக்கப்படும் என்பதை இரு நாட்டுத் தலைவர்களிடமும் தெளிவாகத் தெரிவித்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

