பிரான்சில் (France) அடுத்த வாரம் 44°C வரை சுட்டெரிக்கப்போகும் வெயில்: “முன்னெப்போதும் கண்டிராத” (Scénarios sans précédent) பேராபத்தான கதிர் வெம்மையலை (Canicule) எச்சரிக்கை!
பிரான்சின் ஜீரோண்ட் (Gironde) மற்றும் லாண்டஸ் (Landes) மாவட்டங்களில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயால் ஏற்கனவே மாபெரும் அழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இயற்கையின் சீற்றம் இன்னும் ஓயவில்லை.
கடந்த மே மாத இறுதி முதல் இதுவரை மூன்று கொடிய கதிர் வெம்மையலைகளைச் சந்தித்த பிரான்ஸ் மக்கள், வருகின்ற ஜூலை 29, 2026 முதல் மீண்டும் ஒரு அதிதீவிர கதிர் வெம்மையலையை (Nouvelle canicule) எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். “இது மிகவும் கடுமையானதாக இருக்கப்போகிறது” என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளனர் .
எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை 29) முதல் பிரான்சைத் தாக்கவுள்ள இந்த நான்காவது கதிர் வெம்மையலை உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அது எந்த அளவிற்குத் தீவிரமாக இருக்கப்போகிறது மற்றும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறது என்பதே தற்போது வானிலை ஆய்வாளர்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை, ஜூலை 24) காலை வெளியான வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின்படி (Modèles météo), இந்த வெப்பம் மனிதர்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சின் காலநிலையை அளவிடும் தேசிய வெப்பக் குறியீடு (ITN) தற்போது மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. 1947-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள 30 வானிலை நிலையங்களின் (Stations météo) பதிவுகளைக் கொண்டு கணக்கிடப்படும் இந்தச் சராசரி அளவீடு, அடுத்த வாரம் வரலாறு காணாத உச்சத்தைத் தொடவுள்ளது.
அமெரிக்காவின் ‘உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு அமைப்பு’ (GFS – Global Forecast System) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை இறுதி மற்றும் ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்தத் தேசிய வெப்பக் குறியீடு 31°C முதல் 32°C வரை பதிவாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட இடத்தின் அதிகபட்ச வெப்பநிலை அல்ல; மாறாக, ஒட்டுமொத்த நாட்டின் பகல் மற்றும் இரவு நேரச் சராசரி வெப்பநிலையாகும் (Moyennes entre les températures du jour et de la nuit).
அமெரிக்க வானிலை அமைப்பின் இந்தக் கணிப்பு தற்போதைக்குச் சற்றே மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், இதை நாம் ஒரு தீவிர எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
“மற்ற வானிலை மாதிரிகளும் முன்னெப்போதும் கண்டிராத மிகக் கொடிய வெப்பப் பதிவுகளையே (Scénarios sans précédent) கணித்துக் காட்டுகின்றன. எனவே, வரப்போகும் இந்த ஆபத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.
சுருக்கமாகச் சொல்வதானால், அடுத்த வாரம் வரப்போகும் இந்த கதிர் வெம்மையலையானது, கடந்த ஜூன் மாத இறுதியில் நிலவிய வரலாற்று உச்சத்தையோ, அல்லது 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பயங்கரமான கதிர் வெம்மையலையையோ (Épisode caniculaire terrible) மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என மிக உறுதியாக எதிர்பார்க்கலாம்

