இவரி-சுர்-செய்னில் (Ivry-sur-Seine) காவல்துறையின் வெறியாட்டம்:

இவரி-சுர்-செய்னில் (Ivry-sur-Seine) காவல்துறையின் வெறியாட்டம்: ‘இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ எனக் கொதித்தெழுந்த நகரமுதல்வர் !

பாரிஸ் புறநகர்ப் பகுதியான வால்-து -மார்ன் (Val-de-Marne) மாவட்டத்தில் உள்ள இவரி-சுர்-செய்ன் (Ivry-sur-Seine) நகரில், காவல் துறையினர் பொதுமக்களின் மீது நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் (Intervention musclée) பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி மக்கள் அலறியடித்து ஓடும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை (சூலை 21) இரவு மான்மௌசோ (Monmousseau) குடியிருப்புப் பகுதியில் உள்ள ‘அமடே-ஹுவான்’ (Amadée-Huon) வளாகத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போதைய ‘கதிர் வெம்மையலை’ காரணமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் இருக்க முடியாமல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெளியே உள்ள பூங்காவில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

இரவு சுமார் 10 மணியளவில் அங்கு வந்த கிரித்தை (Créteil) பகுதியின் சிறப்பு குற்றத்தடுப்புப் படையினர் (BAC – Brigade anti-criminalité), எவ்வித முன்னறிவிப்புமின்றி மக்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை (Gaz lacrymogène) வீசியுள்ளனர்.

“அங்கு 12 வயதிற்கும் குறைவான சுமார் முப்பது குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். இதை நிறுத்தும்படிக் கேட்ட தாய்மார்கள் மீதும் காவல்துறை இரக்கமின்றிப் புகைக்குண்டுகளை வீசியது,” என நேரில் பார்த்த இளம் பெண்மணி ஒருவர் ‘செர்வோ நொன் டிஸ்போனிபிள்’ (Cerveaux non disponibles) என்ற ஊடகத்திடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு இவரி-சுர்-சென் நகரமுதல்வர் பிலிப் பௌய்சௌ (Philippe Bouyssou) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதன்கிழமையன்று தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:

“கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ரப்பர் குண்டுகள் (Flash-ball) மற்றும் தடியடிகள் மூலம் அப்பாவி மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு தாய் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (Urgences) அனுமதிக்கப்பட்டுள்ளார்.”
“குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு (Traumatisés) ஆளாகியுள்ளனர்.

பாட்டாளி மக்கள் (Quartier populaire) வாழும் பகுதியில் காவல்துறை நடத்தியுள்ள இந்த வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது (Inadmissibles).”

பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாகக் காவல்துறை விசாரணைக் கண்காணிப்பு ஆணையத்தில் (IGPN) புகாரளிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அத்துமீறிய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸிற்கு (Laurent Nunez) அவர் அவசரக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

இந்த அத்துமீறல் குறித்துப் பாரிஸ் காவல் துறை (Préfecture de Police) தங்களது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளது. “சந்தேகத்திற்குரிய நபர் (Individu suspect) ஒருவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் தனது அலைபேசியைக் கீழே போட்டுவிட்டுத் தப்பியோடினார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களைக் காவல்துறைக்கு எதிராக அவர் தூண்டிவிட்டார்.

அவர்கள் எங்கள் மீது பொருட்களை வீசித் தாக்கியதாலேயே (Jets de projectiles) கூட்டத்தைக் கலைக்க மிதமான பலத்தைப் பிரயோகித்தோம் (Moyens de force intermédiaire),” எனக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. எனினும், சாலையில் சென்ற ஒரு பெண்மணிக்கு இதனால் மூச்சுத்திணறல் (Crise d’angoisse) ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அரசியல் மட்டத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ‘லா பிரான்ஸ் இன்சௌமிஸ்’ (LFI) கட்சியின் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாத்தில் பனோட் (Mathilde Panot), “பாட்டாளி மக்கள் வாழும் பகுதிகளில் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? குற்றத்தடுப்புப் படைக்கு (BAC) அத்தனை உரிமைகளும் உள்ளதா?” எனத் தனது சமூக வலைத்தளத்தில் (Instagram) சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது குறித்துப் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Recommended For You

About the Author: admin