பிரான்சில் தொலைபேசி வழி வணிக அழைப்புகளுக்குத் தடை!

பொதுமக்களின் அன்றாட அமைதியைக் கெடுக்கும் வகையில் வரும் தேவையற்ற தொலைபேசி வழி வணிக அழைப்புகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் மாபெரும் அறிவிப்பைப் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

வருகின்ற ஓகஸ்ட் 11, 2026 முதல் இந்தத் தடை நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இனி உங்கள் அனுமதியின்றி எந்தவொரு நிறுவனமும் பொருட்களை விற்க உங்களைத் தொடர்புகொள்ள முடியாது!

தற்போதுள்ள நடைமுறைப்படி, எரிசக்தி மேம்பாடு (Rénovation énergétique) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அல்லது முதியோர்களுக்கான வீட்டுச் சீரமைப்பு போன்ற சில குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளத் தடை உள்ளது.

மற்ற நிறுவனங்களின் அழைப்புகளைத் தடுக்கப் பொதுமக்கள் ‘பிளாக்டெல்’ (Bloctel) என்ற இலவசச் சேவையைப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், ஓகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதியின்படி, அனைத்துத் துறைகளுக்கும் இந்தத் தடை முழுமையாகப் பொருந்தும்.

எக்காரணம் கொண்டும் நிறுவனங்கள் தன்னிச்சையாகப் பொதுமக்களைத் தொடர்புகொண்டு வணிகம் செய்ய முடியாது.

புதிய விதிகளின்படி, இரண்டே இரண்டு குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே நிறுவனங்கள் உங்களை அழைக்க முடியும்:
நடப்பில் உள்ள ஒப்பந்தங்கள் (Contrat conclu): நீங்கள் ஏற்கனவே ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்து, அந்த நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தவோ அல்லது கூடுதல் திட்டங்களை வழங்கவோ உங்களைத் தொடர்புகொள்ளலாம்.

வணிக நோக்கிலான அழைப்புகளைப் பெற நீங்கள் சுயமாகவும், தெளிவாகவும், வெளிப்படையாகவும் (Libre et éclairée) உங்கள் சம்மதத்தைத் தெரிவித்திருந்தால் மட்டுமே அவர்கள் உங்களை அழைக்க முடியும்.

இந்த அனுமதியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம்; அவ்வாறு செய்துவிட்டால் அதன் பிறகு அவர்கள் உங்களை அழைக்கக் கூடாது.

உங்கள் அனுமதியைப் பெற்றிருந்தாலோ அல்லது நீங்கள் அவர்களின் வாடிக்கையாளராக இருந்தாலோ கூட, அவர்கள் நினைத்த நேரத்தில் உங்களை அழைத்துவிட முடியாது.

அதற்கும் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:

அனுமதிக்கப்பட்ட நாட்கள் மற்றும் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே நிறுவனங்கள் அழைக்க முடியும்.
அதுவும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மட்டுமே அழைக்க அனுமதி உண்டு.

சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் (Jours fériés) அழைப்பது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
(இந்த நேரங்களைத் தாண்டி உங்களை அழைப்பதற்கு நீங்கள் வெளிப்படையாக நேரத்தைக் குறிப்பிட்டு அனுமதி அளித்திருந்தால் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு உண்டு).

ஓ கஸ்ட் 11 முதல், இந்த விதிமுறைகளை மீறிச் செய்யப்படும் எந்தவொரு வணிக அழைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமும் சட்டப்படி செல்லாது (Non valable).

நிறுவனங்களே நிரூபிக்க வேண்டும்: நுகர்வோரின் சம்மதத்தை முறையாகப் பெற்ற பின்னரே அழைத்தோம் என்பதற்கான ஆதாரத்தை நிறுவனங்களே அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும்.

எங்குப் புகாரளிப்பது?: இந்த விதிகளை மீறி உங்களுக்குத் தொல்லை தரும் அழைப்புகள் வந்தால், மோசடித் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் (DGCCRF) அதிகாரப்பூர்வத் தளமான ‘சிக்னல் கான்சோ’ (Signal Conso) இணையதளத்தில் நீங்கள் உடனடியாகப் புகாரளிக்கலாம்.

சிறு குறிப்பு: இந்தத் தொலைபேசி வழி வணிக அழைப்புகளுக்கான தடையிலிருந்து, செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைச் சந்தாக்கள் (Abonnements à des journaux) தொடர்பான வணிகங்களுக்கு மட்டும் சட்டப்படி விலக்களிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin