அமெரிக்கப் படைகள் இருக்கும் இடங்களிலிருந்து பொதுமக்கள் 500 மீட்டருக்கு அப்பால் விலகி இருங்கள்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் மறைமுக குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குறைந்தது 500 மீட்டருக்கு அப்பால் விலகி இருக்குமாறு அதிகாரப்பூர்வ அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மறைமுகமாகச் செயல்படும் அமெரிக்கப் படைகள்
இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ மோதல் தீவிரடமடைந்துள்ள சூழலில் ஈரானின் தாக்குதல்களுக்குப் பயந்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்களின் வழக்கமான ராணுவத் தளங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது.
அவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புப் பன்னடுக்குக் கட்டிடங்களை தங்களின் மறைமுகத் தளங்களாக மாற்றி, அங்கிருந்தபடி ராணுவ நடவடிக்கைகளை இயக்கி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் பதுங்கியிருக்கும் இந்த நகர்ப்புறக் கட்டிடங்கள் எந்நேரமும் ஈரானியப் படைகளின் தாக்குதல் இலக்குகளாக மாறக்கூடும் என்பதால், அமெரிக்கப் படைகளுக்கு அடைக்கலம் அல்லது இடவசதி கொடுத்துள்ள மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக அந்த இடங்களை விட்டு 500 மீட்டர் தூரத்திற்கு அப்பால் விலகியிருக்க வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்கப் படையினரின் இத்தகைய புதிய பதுங்குவிடங்கள் பற்றித் தெரிந்தால், அதைத் தங்களின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கிற்குத் தகவல் தெரிவிக்குமாறும் அந்த நாட்டு மக்களுக்கு IRGC கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா நேரடியாகப் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஈரான் எல்லையிலுள்ள பாலங்கள், மீன்பிடித் தளங்கள், பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்புகளை அமெரிக்கா குறிவைத்துத் தாக்கி வருவதாகவும், ஈராக் எல்லையில் யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலே தற்போதைய தீவிர நிலைக்குக் காரணம் என்றும் ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களை நடத்தினால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல்கள் நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

