பிரான்சின் (France) அணுவாயுதப் போர்ப்பயிற்சியில் முதல்முறையாக இணையும் ஜெர்மனி !

வரலாற்றில் முதல்முறையாக, பிரான்சின் அணுவாயுதப் போர்ப்பயிற்சியில் (Exercice nucléaire) ஜெர்மனியின் இ ராணுவம் பங்கேற்கவுள்ளது.

ஐரோப்பியப் பாதுகாப்பில் ஒரு புதிய ‘தடுப்பு’ உத்தியையும் (Stratégie de dissuasion) புதிய கொள்கையையும் (Doctrine) உருவாக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை ஜெர்மன் சான்சலர் ஃபிரெட்ரிக் மெர்ட்ஸ் (Friedrich Merz) அறிவித்துள்ளார்.

ஜெர்மனியின் கொலோன் (Cologne) நகருக்கு அருகே உள்ள ப்ரூல் (Brühl) பகுதியில் அமைந்துள்ள ஒகஸ்டஸ்பர்க் அரண்மனையில் (Château d’Augustusburg) வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) மற்றும் ஜெர்மன் சான்சலர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சான்சலர் மெர்ட்ஸ், “இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரெஞ்சு ஆயுதப்படைகளால் (Forces armées françaises) நடத்தப்படும் அணுவாயுதப் போர்ப்பயிற்சியில் நமது ஜெர்மனியின் மரபுவழிப் படைகள் (Forces conventionnelles) பங்கேற்கும்,” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் இந்தப் பாதையில் படிப்படியாக முன்னேறி வருகிறோம்; இது எதிர்காலத்தில் ஒரு புதிய பாதுகாப்புச் சித்தாந்தத்திற்கு (Nouvelle doctrine) வழிவகுக்கலாம்; ஆனால் அது குறித்து இப்போதே கணிப்பது முன்கூட்டிய முடிவாகிவிடும்,” என்று குறிப்பிட்டார்.

இந்த இரு நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்பது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (OTAN) கூட்டமைப்பின் ‘அணுவாயுதப் பாதுகாப்புக் குடையை’ (Parapluie nucléaire) மாற்றுவதற்கானது அல்ல என்பதை ஜெர்மன் சான்சலர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார்.

இந்த நகர்வு நேட்டோவுடனான தங்களின் பாதுகாப்புப் பகிர்வுக் கடமைகளை (Partage nucléaire) மேலும் வலுப்படுத்துமே தவிர, அதற்கு ஒருபோதும் மாற்றாக அமையாது

என்றும் அவர் குறிப்பிட்டார்
ஐரோப்பியப் பாதுகாப்பிற்கு (Sécurité européenne) அமெரிக்கா அளித்து வரும் உத்தரவாதங்கள் குறித்து நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்து வருவதுதான் இதன் பின்னணியாகும். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நடவடிக்கைகளுக்கான சில இராணுவத் தளவாடங்களைக் குறைக்கும் திட்டங்களை வாஷிங்டன் (Washington) வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அட்லாண்டிக் கடந்த இந்த ராணுவக் கூட்டமைப்பைத் (Alliance transatlantique) தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இத்தகைய நிச்சயமற்ற பூகோள அரசியல் சூழலில்தான், ஐரோப்பாவின் தற்காப்புத் திறனையும், இ ராணுவத் தற்சார்பையும் (Autonomie stratégique) அதிரடியாக அதிகரிக்கும் நோக்கில், பிரான்சும் ஜெர்மனியும் தங்கள் கைகளை வலுவாகக் கோர்த்துள்ளன!

Recommended For You

About the Author: admin