சீனா – வட கொரியா இடையிலான புதிய யாலு நதிப் பாலம் நாளை திறப்பு!
சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய யாலு நதிப் பாலம் (New Yalu River Bridge), நாளை (15) வாகனப் போக்குவரத்துக்காக உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளதாக சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், சீனா தனது பாலத்தின் நிர்மாணப் பணிகளை 2014ஆம் ஆண்டில் நிறைவு செய்திருந்தது.
எனினும், வட கொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை விதித்த தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கு சீனா ஆதரவளித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, வட கொரியா தனது பாலத்தின் நிர்மாணப் பணிகளைப் பல ஆண்டுகளாக இடைநிறுத்தியிருந்தது.

