பிரான்ஸில் நள்ளிரவில் நின்ற பேருந்து! – இந்திய பெண் மருத்துவர் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
பிரான்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பெண் மருத்துவர் ஒருவர், அங்கு தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து, இந்தியாவின் உழைக்கும் கலாச்சாரத்தைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
பாரிஸ் நகருக்குச் செல்வதற்காக FlixBus பேருந்தை முன்பதிவு செய்த மருத்துவர் கரிமா சவுகான், தனது பயணத்தின் போது கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் ஒரு பெட்ரோல் நிலையம் அருகே பழுதாகி நின்ற பேருந்தை, காலை 10 மணி வரை அதாவது சுமார் 6 மணி நேரமாக அந்நிறுவனம் சரிசெய்யவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யவோவில்லை.
இதனால் தனது முழுப் பயணத் திட்டமும் முற்றிலும் பாழாகிவிட்டதாக வேதனை தெரிவித்த அவர், இந்தத் தகுதியற்ற சேவைக்கு இழப்பீடாக அந்நிறுவனம் வெறும் 10 யூரோ மதிப்புள்ள வவுச்சரை மட்டுமே வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை இந்தியாவின் சூழலுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் மூலைக்கு மூலை உள்ள மெக்கானிக்குகள் மூலமாக 15 நிமிடங்களில் பேருந்து சரிசெய்யப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
ஐரோப்பாவில் இரவில் யாரும் வேலை செய்வதில்லை என்றும், காலையில் நிதானமாக வந்துதான் பணியைத் தொடங்குவார்கள் என்றும் கூறிய அவர், இந்தியர்களிடம் இயல்பாகவே கடினமாக உழைக்கும் திறன் இருப்பதாகப் புகழ்ந்துள்ளார்.
டாக்டரின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி, ஐரோப்பாவின் ‘ஒர்க்-லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) கலாச்சாரத்திற்கு ஆதரவாகவும், இந்தியாவின் அவசரச் சூழலை விமர்சித்தும் நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

