“LPL ல் சூதாட்ட சதி!” – இலங்கை போலீஸாரால் கைது

“LPL ல் சூதாட்ட சதி!” – இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டார் இந்திய முன்னாள் U-19 உலகக்கோப்பை வீரர் மன்ஜோத் கல்ரா!

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 2018-ஆம் ஆண்டு இந்திய U-19 உலகக்கோப்பை வென்ற அணியின் நட்சத்திர வீரரான மன்ஜோத் கல்ரா (Manjot Kalra) இலங்கையில் போட்டி நிர்ணய சதி (Match-fixing) மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் (LPL 2026) டி20 தொடர் தொடங்கவிருக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த மன்ஜோத் கல்ரா, போட்டி முடிவை மாற்றியமைப்பதற்காக கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் இலங்கை ரூபாய்் (சுமார் 28,700 அமெரிக்க டாலர்) பணத்தைக் கொடுக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே மன்ஜோத் கல்ரா தன்னை அணுகியதாக அந்த கிரிக்கெட் வீரர் விளையாட்டுத்துறை குற்றத் தடுப்பு சிறப்புப் புலனாய்வுப் பிரிவிடம் (SIU) புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தீவிரமாகக் கண்காணித்து வந்த போலீஸார், பணத்தைக் கொடுக்க முயன்ற போது மன்ஜோத் கல்ராவைக் கைது செய்தனர்.

மன்ஜோத் கல்ரா வெறும் வீரராக மட்டுமில்லாமல், இந்த ஆண்டு எல்பிஎல் தொடரில் விளையாடும் ஜாஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளராகவும் (Co-owner) செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டு பிருத்வி ஷா தலைமையில் இந்திய அணி U-19 உலகக்கோப்பையை வென்றது. அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் சதம் (101*) விளாசி இந்தியாவிற்கு உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்தவர் இந்த மன்ஜோத் கல்ரா தான்.

அந்த இந்திய இளையோர் அணியில் விளையாடிய ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி போன்ற வீரர்கள் தற்போது இந்திய சீனியர் அணியின் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் வேளையில், மன்ஜோத் கல்ரா மேட்ச் ஃபிக்சிங் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த அதிரடி கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, மன்ஜோத் கல்ரா விரைவில் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Recommended For You

About the Author: admin