எம்பாப்பேவின் வரலாற்றுச் சாதனையுடன் அரையிறுதிக்குள் கம்பீர நுழைவு!
அமெரிக்காவின் பாஸ்டன் விளையாட்டரங்கில் நேற்று அதிர்வுகள் அடங்க வெகுநேரமானது. கத்தார் உலகக்கோப்பையின் அரையிறுதியில் சந்தித்த அதே மொராக்கோ அணியை,
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காலிறுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டது பிரான்சு. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஈடற்ற அதிர்வலையைக் கிளப்பிய இப்போட்டியில்,
2-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்குள் கம்பீரமாகக் கால்பதித்துள்ளது பிரான்சின் நீலப்படை.
பிரான்சுக்குப் பெரும் சவாலாக விளங்கிய மொராக்கோ ஆட்டத்தின் முடிவில் பிரான்சு வென்றிருந்தாலும், இந்த வெற்றி அவர்களுக்கு அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ‘அட்லஸ் சிங்கங்கள்’ என அழைக்கப்படும் மொராக்கோ வீரர்கள், தங்களின் அசாத்திய தற்காப்பு அரணாலும், மின்னல் வேகத் தாக்குதல்களாலும் பிரான்சு அணிக்குப் பெரும் சவாலாகவே உருவெடுத்தனர்.
மைதானத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இரு அணி வீரர்களுக்கும் இடையே அனல் பறக்கும் பந்துப் பரிமாற்றங்கள் அரங்கேறின.
ஆட்டத்தின் உச்சக்கட்டப் பரபரப்பாக, பிரான்சுக்குக் கிடைத்த அந்தத் ‘தண்டனை உதை’ (Penalty kick) அமைந்தது. உலகமே மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்க, பந்தை வலைக்குள் செலுத்தும் உத்வேகத்துடன் ஓடிவந்தார் நட்சத்திர நாயகன் கிலியன் எம்பாப்பே. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் அந்தத் தண்டனை உதை இலக்கைத் தவறியது!
பிரான்ஸ் ரசிகர்கள் ஒருகணம் பெருமூச்சுடன் உறைந்துபோனார்கள். மொராக்கோ அணியின் தன்னம்பிக்கையும் ஆக்ரோஷமும் அப்போது மேலும் பலமடங்கு அதிகரித்தது.
எனினும், வீழ்ந்த இடத்திலிருந்தே விஸ்வரூபம் எடுப்பதுதானே ஒரு வெற்றியாளனின் உண்மையான அடையாளம்!
தண்டனை உதையைத் தவறவிட்ட ஏமாற்றத்தைத் தனது வேகமான ஆட்டத்தால் ஈடுசெய்தார் எம்பாப்பே.
மொராக்கோவின் இரும்பு அரணை உடைத்து அவர் அடித்த அந்த அபாரமான கோல், அரங்கத்தையே அதிரச் செய்தது.
இந்த உலகக்கோப்பைக் களத்தில் அவர் பதிவு செய்த இந்தக் கோல், உலகக் கால்பந்து வரலாற்றில் அவரது தனிப்பெரும் சாதனையாகவும், ஜாம்பவான்களின் வரிசையில் அவருக்கான அசைக்க முடியாத இடத்தையும் உறுதி செய்துள்ளது.
அவரைத் தொடர்ந்து, சக வீரரான உசுமான் டெம்பேலே தன் பங்கிற்கு லாவகமாகப் பந்தை வலைக்குள் செலுத்தி, பிரான்சின் வெற்றியை 2-0 என முழுமையாக்கினார்.
தன்னம்பிக்கையுடன் போராடிய மொராக்கோவின் கடுமையான சவாலை முறியடித்து, இறுதிப்போட்டிக்கான பயணத்தில் வீறுநடை போடும் பிரான்ஸ் , வரும் ஜூலை 14-ஆம் திக தி டல்லாஸ் நகரில் நடைபெறவுள்ள மாபெரும் அரையிறுதிச் சமரில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, தனது மகுடத்தில் மூன்றாவது நட்சத்திரத்தைப் பொறிக்கும் நீலப்படையின் கனவு மெய்ப்படுமா? உலகக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!

