உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் ‘லாஸ்ட்-16’ நாக்-அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரொபர்டோ மார்டினெஸ் (Roberto Martinez) விலகியுள்ளார்.
அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கல் மெரினோ அடித்த அதிரடி கோல் மூலம் போர்ச்சுகல் 1-0 எனத் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியுடன் ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகலின் உலகக் கிண்ணக் கனவு கலைந்தது.
இப்போட்டிக்குப் பிறகு ஊடகவியலாளர்களைச் சந்தித்த மார்டினெஸ், போர்ச்சுகல் அணியுடனான தனது பயணம் இத்துடன் நிறைவுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “போர்ச்சுகல் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இதுவே எனது கடைசிப் போட்டி என்பது உண்மைதான்.
போர்ச்சுகல் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இது எனது வாழ்வில் மறக்க முடியாத, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பெருமைமிக்க காலகட்டமாகும்.
ரசிகர்கள் மற்றும் போர்ச்சுகல் மக்கள் எங்களுக்காகக் கொடுத்த பேராற்றலும் ஆதரவும் அசாத்தியமானது.
இந்த நினைவுகளை நான் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில் சுமந்து செல்வேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
52 வயதான ஸ்பெயின் நாட்டுப் பயிற்சியாளரான ரொபர்டோ மார்டினெஸ், இதற்கு முன்னர் பெல்ஜியம், எவர்டன், விஅத்லெடிக் மற்றும் ஸ்வான்சீ சிட்டி ஆகிய அணிகளுக்குப் பயிற்சியளித்த அனுபவத்தைக் கொண்டவர்.
கடந்த 2023ஆம் ஆண்டு போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இவரின் ஒப்பந்தக் காலம் இத்தொடருடன் முடிவடையும் நிலையில், தனது 3 ஆண்டுகாலப் பயணத்தை அவர் நிறைவு செய்துள்ளார்

