கழிவு தேயிலை கடத்திய மூவர் அக்கரப்பத்தனையில் கைது: சிற்றுருதி மற்றும் 800 கிலோ தேயிலை பறிமுதல்

அக்கரப்பத்தனை – எல்பியன் பிரதேசத்தில் இருந்து கம்பளை பகுதிக்கு அனுமதிப் பத்திரமின்றி சிற்றுந்து ஒன்றில் கழிவு தேயிலை கடத்த முயன்ற மூவர் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை காவல் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று அதிகாலை 1.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 800 கிலோ கிராம் கழிவு தேயிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றுருதி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான மூவரும் இன்றைய தினம் நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை காவல் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.

மேலும், இவ்வாறான குற்றச்செயல்கள் இந்தப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இதில் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin