பிரான்சில் அரசியல் மறுமலர்ச்சி !

மரின் லு பென் (Marine Le Pen)-க்கு 15 மாதங்கள் தேர்தலில் போட்டியிடத் தடை

2027 அதிபர் தேர்தலில் போட்டியிடச் சட்டப்பூர்வ வாய்ப்பு!

பிரான்ஸ் அரசியல் களமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த Rassemblement National (RN) கட்சியின் ‘நாடாளுமன்ற உதவியாளர்கள்’

வழக்கில், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

முதல் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டுகள் தடையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய மேல்முறையீட்டுத் தீர்ப்பு மரின் லு பென்னுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் மறுவாழ்வையும், அதே நேரத்தில் சில கடுமையான நிபந்தனைகளையும் கொடுத்துள்ளது.

நீதிமன்ற அறையிலிருந்து நேரடியாக வெளிவந்துள்ள அதிகாரப்பூர்வ அதிரடித் தகவல்கள் பின்வருமாறு:
நீதிமன்றம் மரின் லு பென்னுக்கு மொத்தம் 45 மாதங்கள் தேர்தலில் போட்டியிடத் தடை (peine d’inéligibilité) விதித்துள்ளது.

எனினும், இதில் 30 மாதங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து (avec sursis), வெறும் 15 மாதங்களை மட்டுமே கட்டாயத் தடையாக (ferme) அறிவித்துள்ளது.

“இந்தத் தடைக்காலம் ஏற்கனவே கடந்த 2025 மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதால், அவரது தார்மீகக் குற்றத்திற்கான தண்டனை இதன் மூலம் ஈடுசெய்யப்பட்டுவிட்டது”

என மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மிஷேல் ஆஜி (Michèle Agi) அறிவித்துள்ளார். இதன் மூலம், வரும் 2027 அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான சட்டப்பூர்வத் தகுதி (a priori) தற்காக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தடைக்காலம் குறைந்திருந்தாலும், குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் முழுமையாக விடுபடவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அதற்குத் துணை நின்றது ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதில் ஒரு வருடம் அவர் மின்னணு வளையல் (bracelet électronique) கண்காணிப்புடன் தனது வீட்டிலேயே சிறைத்தண்டனையைக் கழிக்க வேண்டும். இவற்றுடன் 1,00,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மின்னணு வளையல் மாட்டிக்கொண்டு தம்மால் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது என மரின் லு பென் ஏற்கனவே கூறியிருந்ததால்,

இந்த ஒரு வருடக் கண்காணிப்புத் தண்டனையை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

Rassemblement National (RN) கட்சிக்கு நீதிமன்றம் 20 லட்சம் யூரோக்கள் (2 millions d’euros) அபராதம் விதித்துள்ளது (இதில் 10 லட்சம் யூரோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது).

“ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி என்பதும் பொதுமக்களின் பணமே; ஒப்பந்தங்களை ஆராயும்போது இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு முறைகேடான கட்டமைப்பு (système) என்பது நிரூபணமாகிறது” என நீதிமன்றம் சாடியுள்ளது.

லூயி அலியோ தப்பினார்: பெர்பினியான் (Perpignan) நகர மேயரான லூயி அலியோ (Louis Aliot)-வுக்கு ஒரு வருடச் சிறையும், 2 ஆண்டுகள் தேர்தல் தடையும் விதிக்கப்பட்டாலும்,

அவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் (avec sursis) செய்யப்பட்டுள்ளதால், அவர் தனது மேயர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடிந்ததும், மரின் லு பென் ஊடகங்களுக்கு எவ்விதப் பேட்டியும் அளிக்காமல் தனது வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு நீதிமன்ற வளாகத்தை விட்டு உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.

இருப்பினும், இந்த அதிரடித் தீர்ப்பு குறித்தும், தனது 2027 அதிபர் தேர்தல் களம் குறித்தும் இன்று இரவு 20:00 மணிக்கு பிரெஞ்சு தொலைக்காட்சியான TF1 இன் நேரடிச் செய்திப் பிரிவில் அவர் பிரத்யேகமாக உரையாற்றவுள்ளார்.

கடும் விவாதங்களுக்கும் அரசியல் நகர்வுகளுக்கும் வழிவகுத்துள்ள இந்தத் தீர்ப்பு, பிரான்சின் வலதுசாரி
அரசியலில் மரின் லு பென்னின் பிடியை மேலும் வலுவாக்குமா அல்லது ஜோர்டான் பார்டெல்லாவின் வியூகங்களை மாற்றிமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Recommended For You

About the Author: admin