சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு மூளை பாதிப்பு, தசை மற்றும் எலும்புகளில் கடுமையான வலி, அத்துடன் இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 7 முதல் 8 நாட்களில் சிறுவர்கள் குணமடைய வேண்டும் என்றாலும், அதன்பிறகும் பசியின்மை, சோர்வு மற்றும் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால், அது நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக CPK பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு நுளம்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க, மாலை 5 மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறும், சிறுவர்களுக்கு முழுக்கை சட்டை மற்றும் நீளக் காற்சட்டைகளை அணிவிக்குமாறும் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்

