Paris-இல் நேற்றுமுன்தினம் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண்ணைப் பற்றிய மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன!
கடந்த புதன்கிழமை (ஜூலை 1) Paris நகரின் 12-ஆவது வட்டாரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது நீங்கள் அறிந்ததே.
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 49 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் மனநலச் சிகிச்சை முடிந்து அன்றைய தினம் காலையில்தான் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
போதைப்பொருளுக்கு (Méthamphétamines) அடிமையாகியிருந்த அவர், தனது துணையை விட்டுப் பிரிந்து கடந்த 15 நாட்களாக rue de Wattignies பகுதியில் உள்ள தனது சகோதரரின் உணவகத்தின் பாதாள அறையில்தான் (Cave) தங்கியிருந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை சுமார் 5 மணியளவில், அந்தப் பெண்ணின் மனநிலை குறித்துக் கவலையடைந்த அவரது முன்னாள் துணைவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினரைக் கண்டதும், அந்தப் பெண் உடனடியாகப் பாதாள அறைக்குள் ஓடிச் சென்று பதுங்கிக்கொண்டார்.
அவரைப் பின்தொடர்ந்து முதலில் கீழே இறங்கிய பெண் காவலரை, அந்தப் பெண் ஒரு பெரிய இறைச்சி வெட்டும் கத்தியைக் கொண்டு வெறித்தனமாகத் தாக்க முயன்றுள்ளார்.
தற்காப்பிற்காக அந்தப் பெண் காவலர் உடனடியாகத் தனது மின்சாரத் துப்பாக்கியைப் (Pistolet à impulsion électrique) பயன்படுத்தியுள்ளார்.
அதே வேளையில், அவருக்குப் பின்னால் வந்த மற்றொரு ஆண் காவலர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் அந்தப் பெண்ணை நோக்கிச் சுட்டுள்ளார்.
படிக்கட்டுகளில் மொத்தம் எட்டுத் தோட்டாக்கள் சுடப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்றத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக முயன்றும், அவர் துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசு அதிகாரியைக் கொல்ல முயன்றது மற்றும் அரசு அதிகாரியின் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு என இரண்டு கோணங்களில் Paris அரசுத் தரப்பு வழக்குரைஞர் அலுவலகம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
அதேவேளை இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை கண்காணிப்பு அமைப்பான IGPN தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

