மாணவர்களின் மனநலன் காக்கப் புதிய இலவச உதவி எண் 3040: பிரான்ஸ் அரசின் புதிய முன்னெடுப்பு!

மாணவர்களின் மனநலன் காக்கப் புதிய இலவச உதவி எண் 3040: பிரான்ஸ் அரசின் புதிய முன்னெடுப்பு!

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் மனநலனைப் பேணிக் காக்கும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பிரான்ஸ் அரசு 3040 என்ற புதிய இலவச மற்றும் ரகசிய உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று முதல் (ஜூலை 1) செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலம், மாணவர்கள் உளவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களிடம் தங்களின் மனக்குறைகளைக் கொட்டி இலவசமாக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற முடியும்.

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Cnaé அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த உதவி எண்ணில் பகல் நேரங்களில் நிபுணர்கள் பதிலளிப்பார்கள்.

இரவு நேரங்களில் Nightline திட்டத்தின் கீழ், இதற்கெனச் சிறப்புப் பயிற்சி பெற்ற சக மாணவர்களே தொலைபேசி வாயிலாக உரையாடி ஆறுதல் அளிப்பார்கள் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

இதுமட்டுமின்றி, வருகிற அக்டோபர் மாதம் மனநலனுக்கான பிரத்யேக தேசிய இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்படவுள்ளது.

அதில் மாணவர்களுக்கான அனைத்து உதவித் திட்டங்கள், தங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல்களைத் தாங்களே கண்டறிய உதவும் கேள்வித்தாள்கள் மற்றும் வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான தகவல்கள் அனைத்தும் இடம்பெறும் என உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், சுமார் 16 விழுக்காடு மாணவர்களுக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டிருந்ததும், அதில் 60 விழுக்காட்டினருக்குக் கல்வி சார்ந்த அழுத்தங்களே அதற்குக் காரணமாக இருந்ததும் பெருங்கவலையை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்தே மனநலனை ஒரு தேசிய அக்கறையாகக் கருதி அரசு இந்த நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

கரோனா பேரிடருக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட Santé Psy Étudiant திட்டத்தின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1,20,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போதுள்ள இந்தத் திட்டம் அக்டோபர் மாதம் முதல் Mon Soutien Psy திட்டத்தோடு மாற்றியமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் கையிலிருந்து முன்பணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக மனநல ஆலோசனைகளைப் பெற முடியும்.

கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகளில் தவிக்கும் மாணவர்களின் மனச்சுமையைக் குறைக்க அரசின் இந்த 3040 உதவி எண் ஒரு சிறந்த வடிகாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Recommended For You

About the Author: admin