ஐரோப்பிய வானூர்தி நிலையங்களை முடக்கக் காத்திருக்கும் புதிய கட்டுப்பாட்டு முறை!
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தானியங்கி முறையால், இந்தக் கோடைக்காலத்தில் வானூர்தி நிலையங்களில் மாபெரும் குழப்பமும் காலதாமதமும் ஏற்படவுள்ளதாகப் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் புகழ்பெற்ற Ryanair வானூர்தி நிறுவனமும், பல முன்னணி வானூர்தி நிலையங்களின் அதிகாரிகளும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
Schengen எல்லைக்குள் நுழைவோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முறைகேடான குடியேற்றத்தைத் தடுக்கவும் ஏப்ரல் மாதம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, பயணிகள் தங்களின் விரல்ரேகை மற்றும் முகப்பதிவுகளைத் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆனால், கோடை விடுமுறையில் குவியும் மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கையாளும் அளவிற்குப் போதிய இயந்திரங்களோ, பணியாளர்களோ தற்போது இல்லை என்பதே மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள Ryanair நிறுவனம், தற்போதைய நிலையில் இத்திட்டம் முழுமையாகத் தயாராக இல்லை என்றும், விடுமுறையைக் கழிக்க வரும் பயணிகளைப் பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் காட்டமாகக் கூறியுள்ளது. கோடை விடுமுறை முடியும் வரை, அதாவது செப்டம்பர் மாதம் வரை இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கு அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டத்தால் Paris-Beauvais, Tenerife Sud, Palma, Alicante, Malaga, Milan Bergame, Cracovie போன்ற வானூர்தி நிலையங்களில் ஏற்கனவே பல மணிநேரக் காத்திருப்பு நிலவுவதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
“பேரழிவைத் தவிர்க்க இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது மட்டுமே நம்முன் உள்ள ஒரே வழி.” என்கிறார் Rome வானூர்தி நிலைய இயக்குநர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த Grèce நாடு கோடைக்காலம் முடியும் வரை இத்திட்டத்தை ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. Rome வானூர்தி நிலைய அதிகாரியோ, பேரழிவைத் தவிர்க்க இதை நிறுத்திவைப்பது மட்டுமே ஒரே வழி என்று கூறியுள்ளார். Berlin வானூர்தி நிலையத்திலும் பயணிகளுக்கு ஒன்று முதல் இரண்டு மணிநேரம் வரை காத்திருப்பு ஏற்படுவதாகவும், இது கோடையில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மாறும் எனவும் அதன் இயக்குநர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதேபோல பிரித்தானியாவின் Douvres துறைமுகத்திலும் இந்தக் கட்டுப்பாட்டு முறையால் மாபெரும் நெரிசல் ஏற்படலாம் என்ற கவலை நிலவுகிறது. இவ்வளவு எதிர்ப்புகளும் பதற்றமும் நிலவி வரும் சூழ்நிலையிலும், இந்தச் சிக்கலைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தவொரு மாற்று வழியையும் அறிவிக்கவில்லை என்பது பயணிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

