ஐரோப்பா முழுவதும் இலவசமாகத் தொடருந்தில் பயணிக்கலாம்: 18 வயது இளைஞர்களுக்கான ‘DiscoverEU’ திட்டம்!
ஐரோப்பியக் கண்டத்தை அதன் அழகும் பாரம்பரியமும் மாறாமல் இரசிக்கத் தொடருந்துப் பயணங்களை விடச் சிறந்த வழி வேறு ஏது? 18 வயது நிரம்பிய ஐரோப்பிய இளைஞர்கள் ஒரு மாதம் முழுவதும் ஐரோப்பா எங்கும் இலவசமாகத் தொடருந்தில் பயணிக்கும் மாபெரும் வாய்ப்பை வழங்குகிறது DiscoverEU திட்டம்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னெடுப்பில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இதுவரை 4.7 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு இலவசப் பயண வாய்ப்பை வழங்கியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ஐரோப்பா முழுவதும் 30 நாட்கள் வரை Interrail பயணச்சீட்டு மூலம் இலவசமாகப் பயணிக்கலாம்.
பயணங்கள் பெரும்பாலும் தொடருந்துகள் மூலமாகவே அமையும். விமானப் பயணங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன (தீவுப் பகுதிகளுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் உண்டு).
இலவசப் பயணச்சீட்டோடு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், உள்ளூர்ப் போக்குவரத்து, விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் கட்டணச் சலுகைகளைப் பெறுவதற்கான ஐரோப்பிய இளைஞர் அட்டையும் (Carte “jeunes” européenne) வழங்கப்படும்.
யார், எப்போது விண்ணப்பிக்கலாம்?
ஆண்டுக்கு இருமுறை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அடுத்தகட்ட விண்ணப்பங்கள் வருகிற 2026 அக்டோபர் 1 முதல் 15 வரை பெறப்படவுள்ளன. 2008-ஆம் ஆண்டில் பிறந்த இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அல்லது Erasmus+ திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளில் (உ-ம்: ஐஸ்லாந்து, நோ ர்வே, துருக்கி) சட்டபூர்வமாகக் குடியிருக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஐரோப்பிய இளைஞர் இணையத்தளத்தில் (Portail européen de la jeunesse) தங்களது அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு விவரங்களை உள்ளிட்டுப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், உங்களின் பயணத்திட்டங்களை விவரித்து, ஐரோப்பிய ஒன்றியம் குறித்த சில பொது அறிவு வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும்.
தனியாகப் பயணிக்கத் தயங்குபவர்கள், அதிகபட்சம் 4 பேர் கொண்ட குழுவாகவும் (Group of 4) இணைந்து விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் (2026) தேர்ந்தெடுக்கப்பட்ட 5,660 பிரெஞ்சு இளைஞர்கள், 2026 ஜூலை 1 முதல் 2027 செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் தங்களின் இலவசப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட இட ஒதுக்கீடு (Quota) வழங்கப்படுகிறது. கடந்த முறை இத்தாலி நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்திருந்தாலும் (42,744 பேர்), அதிகப் பயணச்சீட்டுகளை வென்றது ஜெர்மனி (6,986) ஆகும். இதற்கு அடுத்தபடியாகப் பிரான்சு 5,660 பயணச்சீட்டுகளைப் பெற்றுள்ளது (பிரான்சில் விண்ணப்பித்தவர்களில் 28.8 விழுக்காட்டினர் இந்த அரிய வாய்ப்பை வென்றுள்ளனர்).
பயணங்கள் மூலம் புதிய மனிதர்களையும், பல்வேறு பண்பாடுகளையும் அறிந்துகொள்ளத் துடிக்கும் பதின்ம வயதினருக்கு இது ஒரு மாபெரும் திறவுகோல்!

