பிரான்சில் அகதிகளுக்கான பயண ஆவணம் Titre de voyage: தாமதத்திற்கான உண்மைக் காரணங்கள் என்ன?

பிரான்சில் அகதிகளுக்கான பயண ஆவணம் Titre de voyage: தாமதத்திற்கான உண்மைக் காரணங்கள் என்ன?

அகதியாக அங்கீகாரம் பெறுவது என்பது நீண்ட போராட்டத்தின் வெற்றியாகும். ஆனால், அந்த நிம்மதியை முழுமையடைய விடாமல் தடுப்பது ‘பயண ஆவணம்’ (Titre de voyage) பெறுவதற்கான நீண்ட நெடிய காத்திருப்புதான். விண்ணப்பித்துவிட்டு ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரை தபால் பெட்டியை பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விடும் நிலை பலருக்கு உள்ளது.

 

இந்த முடிவில்லாத தாமதத்திற்குப் பின்னால் உள்ள அதிகாரத்துவச் சுழல் என்ன? இதைத் துரிதப்படுத்த ஏதேனும் உத்திகள் உண்டா? இது தொடர்பான சமீபத்திய அரசாணைகள் என்ன கூறுகின்றன?

 

தாமதத்திற்கான மூலக் காரணங்கலில் முதன்மையானது

மாகாண நிர்வாகங்களின் சுமையாகும்.

பிரான்சில் உள்ள மாகாண நிர்வாகங்கள் (Préfectures)* கடுமையான பணியாளர் பற்றாக்குறையாலும், குவியும் லட்சக்கணக்கான விண்ணப்பங்களாலும் திணறுகின்றன. மாகாணங்களுக்கு இடையே இந்த தாமத நேரம் பெரிதும் மாறுபடுகிறது. உதாரணமாக, வால்-த்-வாஸ் (Val-d’Oise)° போன்ற சில மாவட்டங்களில் விண்ணப்பங்கள் ஓரளவு சீரான வேகத்தில் நகர்ந்தாலும், ஆனல் வேறு பல மாவட்டங்களில் ஒரு கோப்பு பரிசீலனைக்கு எடுக்கப்படவே பல மாதங்கள் ஆகின்றன.

 

இணையவழி மாற்றத்தின் ஆரம்பக்காலச் சிக்கல்கள்:

 

அனைத்து விண்ணப்பங்களையும் ஒற்றை இணையத்தளத்தின் கீழ் கொண்டுவரும் திட்டம் சமீப ஆண்டுகளில் தீவிரப்படுத்தப்பட்டது. காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் இந்த நல்ல முன்னெடுப்பு, தொழில்நுட்பக் கோளாறுகளாலும், மென்பொருள் பிழைகளாலும் பலரது கோப்புகளை மாதக்கணக்கில் முடக்கி வைத்துள்ளது.

 

பயண ஆவணம் என்பது பன்னாட்டு எல்லையைத் தாண்டும் ஒரு முக்கியச் சான்றிதழ். எனவே, விண்ணப்பதாரரின் தற்போதைய நிலை, அகதிகள் அலுவலகத்தின் முடிவுகள், காவல் துறைப் பதிவுகள் எனப் பல கட்டப் பாதுகாப்புச் சரிபார்ப்புகளுக்குப் பிறகே இது அச்சிட உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது.

 

இதை துரிதமாகப் பெறுவதற்கு வழிகள் உள்ளதா?என்பதே நம்மவர்கள் பலரது கேள்வியாகும் .

 

நேரடியாக “உடனடிச் சேவை” என்ற ஒன்று இதில் கிடையாது. ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட வரிசையிலேயே அவை பரிசீலிக்கப்படுகின்றன. இருப்பினும், சில உத்திகள் மூலம் கோப்பு தேங்குவதைத் தவிர்க்கலாம்:

 

விண்ணப்பிக்கும்போதே மின்னணுப் புகைப்படம் (e-photo)§, முகவரிச் சான்று, அகதி அந்தஸ்துச் சான்று என அனைத்தையும் சிறு பிழைகூட இல்லாமல் பதிவேற்ற வேண்டும். ஒரு சிறு ஆவணம் குறைந்தாலும், கோப்பு கிடப்பில் போடப்பட்டுவிடும்.

 

அவசரக் காரணங்களை நிரூபித்தல்: மருத்துவ அவசரம், நெருங்கிய குடும்ப உறுப்பினரின் இறப்பு அல்லது தவிர்க்க முடியாத தொழில்முறைப் பயணம் போன்ற வாழ்வா சாவா பிரச்சினைகள் இருந்தால், அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் மாகாண நிர்வாகத்திற்குச் சிறப்புக் கடிதம் அனுப்பலாம். வலுவான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் நிர்வாகம் இதற்கு முன்னுரிமை அளிக்கும்.

 

சட்ட ரீதியான தீர்வு: பல மாதங்களாகியும் எந்தப் பதிலும் இல்லை என்றால், வழக்கறிஞர் மூலமாகவோ அல்லது அகதிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அதிகாரப்பூர்வ நினைவூட்டல் கடிதம் (Mise en demeure) அனுப்பலாம். இது பல நேரங்களில் நிர்வாகத்தை உடனடியாகச் செயல்பட வைக்கும்.

 

நீங்கள் ஏற்கனவே இந்த பயண ஆவணத்தை பெற்றிருந்து அது புதுப்பிக்கும் காலகட்டத்தை நெருங்குகிறது என்றால் ,அந்த ஆவணம் முடிவடைவதற்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே புதிய விண்ணப்பத்தைப் பதிவேற்றிவிடுவதே சிறந்த தற்காப்பு.

Recommended For You

About the Author: admin