உயிர்காக்கும் உன்னதப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் அரங்கேறியுள்ளது. ஓ-த்-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தின் கோ ர்பெவுவா (Courbevoie) நகரில், சிகிச்சைக்காக வந்த நோயாளியே பொது மருத்துவர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் ஆறு முறை சரமாரியாகக் குத்திய கொடூரச் சம்பவம் மருத்துவத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை, ஜூன் 25) பிற்பகல் வேளையில், கூர்பெவுவா நகரின் ‘லியோனார் து வின்சி’ (Léonard de Vinci) வீதியில் அமைந்துள்ள மருத்துவகத்தில் (cabinet medical ) சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மனச்சிதைவு நோயால் (Schizophrenie) பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், மருத்துவரின் மார்பு, இடது கை மற்றும் தொடைகளில் ஆறு முறை ஈவிரக்கமின்றித் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மருத்துவர் அதிக இரத்தப்போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சரிந்து விழுந்துள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதல் மேலும் விபரீதமாகாமல் தடுத்தது, காத்திருப்பு அறையில் இருந்த மற்றொரு நோயாளியின் துணிச்சலான செயலேயாகும். அவர் உடனடியாகக் குறுக்கிட்டு, கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கும் வரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் படையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மருத்துவரை மீட்டுப் பாரிஸில் உள்ள ‘ஜோர்ஜ்-பொம்பிடூ’ (Georges-Pompidou) மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கும் கையில் சிறு காயம் ஏற்பட்டதால், அவரும் ‘ரீவ் து சென்’ (Rives de Seine) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நாந்தேர் (Nanterre) நகர அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘திட்டமிட்ட கொலை முயற்சி’ (Tentative d’assassinat) என்ற அடிப்படையில் குற்றவியல் விசாரணையைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தனித்த நிகழ்வல்ல; மருத்துவப் பணியாளர்கள் மீதான வன்முறை நமது நாட்டில் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டின் மருத்துவப் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, தேசிய அளவில் மருத்துவர்கள் மீது சுமார் 2,000 தாக்குதல்களும், ‘இல்-து -பிரான்சு’ (Île-de-France) பிராந்தியத்தில் மட்டும் சுகாதாரப் பணியாளர்கள் மீது 4,000 வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் இத்தகைய வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடரும் இந்த வன்முறைகளால் மனமுடைந்த பல மருத்துவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், மருத்துவகங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நமது பிராந்திய நிர்வாகம் சிறப்பு நிதியுதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

