ஈரான் – ஈராக் எல்லையில் நடப்பது என்ன ? ஈராக்கினுள் ஊடுருவிய IRGC.
ஈரானின் தெற்கு பிராந்தியம் மற்றும் ஹோர்முஸ் நீரினை ஆகியவற்றில் பதற்றங்கள் ஒருபுறமிருக்க, ஈரான் – ஈராக் எல்லையில் பிரிவினைவாதிகளின் ஊடுருவலுக்கு எதிரான தரை நடவடிக்கைகளை ஈரானிய படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா மற்றும் எர்பில் ஆகிய பிராந்தியங்களில், ஈரானுக்கு எதிரான பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புடைய உளவுத்துறைத் தலைவர்களைக் குறிவைத்து, தொடர்ச்சியான தரைவழி நடவடிக்கைகளை ஈரானிய இராணுவம் அறிவித்திருந்தது.
திங்கள்கிழமை இராணுவத்தின் 23வது பிரிகேட், சுலைமானியா மற்றும் எர்பில் ஆகிய பிராந்தியங்களில் 14 தரைவழி நடவடிக்கைகளை நடத்தியதாகவும், ஈரானுக்கு எதிரான பிரிவினைவாதக் குழுக்களைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் ஈராக்கிய உளவாளிகள் பலரை கைது செய்தும், இன்னும் பலரை கொன்றதாகவும் ஈரானிய ஜெனரல் மொஜ்தபா ஜபாரி தெரிவித்துள்ளார்.
மேலும், IRGC யின் சிறப்புப் படைப் பிரிவு ஒன்று ஞாயிற்றுக்கிழமை சுலைமானியா மாகாணத்திற்குள் நுழைந்து, அவர்களது உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஈரானிய எல்லையில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் குர்து இன பிரிவினைவாதிகளை கைது செய்ததாக அவர் கூறினார்.
கண்காணிப்பு மற்றும் உளவு உபகரணங்களை ஈரானுக்குள் கடத்த முயன்ற பல ஆயுதக் குழுக்களையும், தனிநபர்களையும் ஈரானியப் படைகள் கைது செய்தன. பிரிவினைவாத இயக்கத்தினர் ஈரானிய எல்லை நிலைகளை உளவு பார்த்து, அந்தத் தகவல்களை இஸ்ரேலின் மொசாத் அல்லது அமெரிக்க CIA க்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாக மொஜ்தபா ஜபாரி கூறினார்.
மேலும், பிரிவினைவாதிகளின் ஊடுருவலை தடுக்கும்பொருட்டு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்துடனான எல்லையில் 250 km நீளத்திற்கு பாதுகாப்புச் சுவரை ஈரான் அமைத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஈரானுக்கு எதிரான பிரிவினைவாதக் குழுக்களின் தலைமையகங்களை ஈரானிய ஆயுதப் படைகள் குறிவைத்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, PKK குழுக்களும், ஈரானுக்கு எதிரான பிரிவினைவாதக் குழுக்களின் ஈரான் – ஈராக் எல்லையில் அகழிகளையும், சுரங்கங்களையும் கைப்பற்றியதாக சுலைமானியாவில் உள்ள அல் மயாதீன் செய்தியாளர் தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அனுசரணையிலும், தூண்டுதலிலும் இந்தக் குழுக்களின் செயற்பாடுகளானது அழிவுக்கு வழிவகுக்குமே தவிர, இவர்களால் ஒருபோது வெற்றிபெற முடியாது.
ஈராக் எல்லை வழியாக அமெரிக்க படைகள் ஈரானுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஈரானிய படைகள் வலிந்து ஈராக்கினுள் ஊடுருவியுள்ளது.

