சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் , சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரி சந்தை , வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதேநேரம் பாடசாலைகள் , வங்கிகள் , அரச நிறுவனங்கள் , போக்குவரத்து சேவைகள் என்பன வழமை போன்று இயங்கி வருகின்றன.
அதேவேளை , கொடிகாமம் பகுதிகளிலும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது

